முறைப்படி நடக்காத தகுதித் தேர்வுகள்!- 30,000 ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம்? | teacher eligibility test exam issue

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (18/01/2019)

கடைசி தொடர்பு:17:00 (18/01/2019)

முறைப்படி நடக்காத தகுதித் தேர்வுகள்!- 30,000 ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம்?

னைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை 2010-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்தது. இதன் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வேலையில் உள்ள ஆசிரியர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனச் சட்டம் இயற்றப்பட்டது.

இந்தச் சட்டம் 2011-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் நடைமுறைக்கு வந்தது. ஆசிரியர்களாக 2010 க்குப் பிறகு அரசுப் பள்ளிகளில் வேலைக்குச் சேர்ந்தவர்கள் அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனக் கூறப்பட்ட நிலையில் அந்தக் காலக்கெடு கடந்த 2016-ம் ஆண்டோடு முடிவடைந்தது. அதன் பிறகு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான காலக்கெடுவை 2019 மார்ச் 31-ம் தேதி வரை நீடித்து வழங்கியது.

டெட் தேர்வு

இந்நிலையில் ஆசிரியர்கள் தேர்வு பெறுவதற்கான காலக்கெடுவும் சில மாதங்களில் முடிவடைய உள்ள நிலையில் பெருவாரியான ஆசிரியர்கள் இன்னும் தேர்ச்சி பெறவில்லை. 2011-ல் இருந்து 2019 வரை ஆண்டுக்கு இரண்டு தேர்வுகள் வீதம் மொத்தம் 16 முறை டெட் தேர்வுகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் இதுவரை நான்கு முறை மட்டுமே தேர்வுகள் நடைபெற்றுள்ளன. கடைசியாக 2017-ம் ஆண்டு தேர்வு நடைபெற்றது. 2018-ல் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

டெட் தேர்வு

இதுகுறித்துப் பேசிய பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், ``தேர்வுகளை முறையான கால இடைவெளியில் நடத்தாதது அரசின் தவறான செயல். இதுவரை நான்கு முறை மட்டுமே தேர்வுகள் நடைபெற்றுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்காக உடனடியாகச் சிறப்புத் தேர்வை நடத்த வேண்டும். ஏற்கெனவே இடைநிலை ஆசிரியர்களுக்கிடையே ஊதிய முரண்பாடுகளும் உள்ளன. அவையும் களையப்பட வேண்டும்“ என்றனர். தகுதித் தேர்வுகள் முறைப்படி நடக்காததால் 30,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வேலை இழக்கும் நிலையில் உள்ளனர்.