மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு | NGT Orders Performance Audit Of State Pollution Control Boards

வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (18/01/2019)

கடைசி தொடர்பு:20:10 (18/01/2019)

மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுக்குத் தணிக்கை வேண்டும் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

தேசிய பசுமை தீர்ப்பாயம்

'இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை' என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. மேலும், அனைத்து மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மற்றும் பல்வேறு மாசுக் கட்டுப்பாட்டுக் குழுக்களின் செயல்பாடுகளை ஆறு மாதத்திற்குள் தணிக்கை செய்ய வேண்டுமென மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது தேசிய பசுமை தீர்ப்பாயம். 

குஜராத்தின் வால்சாத் (Valsad) மாவட்டத்தில் உள்ள டாமன் கங்கா (Daman Ganga) ஆற்றில், வாபி தொழிற்பேட்டையின் (Vapi Industrial Cluster) 500-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை அப்படியே வெளியேற்றுவதற்கு எதிரான ஆர்யவர்த் அறக்கட்டளையின் (Aryavart Foundation) மனுவை விசாரித்தபோது, இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.  "நாட்டில் பல்வேறு சுற்றுச்சூழல் சட்டங்கள் நடைமுறையில் இருந்தபோதிலும், நாடு முழுக்க 351 ஆற்றுப்படுகைகள் இன்னும் அதீதமாக மாசுபட்டுள்ளன" என நாட்டின் சுற்றுச்சூழல் நிலைமை குறித்து காட்டமான கேள்விகளை எழுப்பியுள்ளது தீர்ப்பாயம்.

மேலும் "சுற்றுச்சூழல் தொடர்பாகப் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. அனைத்து மாநிலங்களின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களும் குழுக்களும், எந்தவொரு தண்டனை நடவடிக்கையையும் எடுப்பதில் தோல்வியடைந்துள்ளது இதன்மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. வெறும் அறிவிப்புகளை வெளியிடுவது நிலைமையை மேம்படுத்துவதில்லை. மாசுபாடு, ஒரு லாபகரமான வியாபாரத்தை உருவாக்க முடியாது மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மற்றும் குழுக்கள், மாசுபடுத்துபவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் " என நீதிபதிகள் பெஞ்ச் தெரிவித்துள்ளது. 

குஜராத் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் நியமிக்கப்பட்டவர்கள், தொழில்நுட்பத் தகுதியோ தொழில்முறைத் தொகுதிகளோ இல்லாதவர்கள் எனப் பிரச்னை ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்த உத்தரவு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஆறு மாதங்களுக்குள் முறையான நிபுணர்களை வைத்து தணிக்கை மேற்கொள்ளப்படுவது மட்டுமில்லாமல், சீரான இடைவெளியில் இந்த மாதிரியான தணிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இதன்பிறகு, ஆகஸ்ட் 19 -ம் தேதி, இந்த விவகாரம் பரிசீலிக்கப்படும் என அறிவித்துள்ளது.