`பயணிகள் ரயில் சேவையில் தனியார்!’ - ரயில்வே துறை ஆலோசனை | Allowing private operators to run trains being discussed, says Railway board member

வெளியிடப்பட்ட நேரம்: 08:46 (19/01/2019)

கடைசி தொடர்பு:08:57 (19/01/2019)

`பயணிகள் ரயில் சேவையில் தனியார்!’ - ரயில்வே துறை ஆலோசனை

பயணிகள் ரயிலை தனியார் இயக்குவது குறித்து ரயில்வே துறை ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. 

ரயில்

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ரயில்வே வாரிய (போக்குவரத்து) உறுப்பினர் கிரீஷ் பிள்ளை இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார். பயணிகள் ரயிலைத் தனியார் இயக்குவது குறித்து ரயில்வே துறையின் உயர் அதிகாரிகள் துறைசார்ந்த வல்லுநர்களுடன் ஆலோசித்து வருவதாக அவர் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், ``ரயில்கள் இயக்கத்தில் பல்வேறு மாற்றங்கள் உலக அளவில் நிகழ்ந்து வரும் நிலையில், பயணிகள் ரயிலைத் தனியார் இயக்குவது குறித்து சிந்திப்பதற்கு இது சரியான நேரம் என்றே தோன்றுகிறது. கட்டணம் நிர்ணயிப்பது, ரயில் நிலையங்களைக் கட்டுவது உள்ளிட்டவையைத் தனியாருக்கு அனுமதி அளிக்கலாமா என்பது குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்கள்’’ என்றார். 

ரயில்வேத் துறை

சரக்கு மற்றும் பயணிகள் ரயில் சேவை ஆகியவற்றைத்  தனித்தனியாக நிர்வகிக்க வேண்டிய தேவை இருக்கிறது என்று குறிப்பிட்ட அவர், நாடு முழுவதும் ஒரு சில ரயில் சேவைகளைத் தவிர பெரும்பாலான ரயில் சேவைகள் இழப்பையே சந்தித்து வருகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நாடு முழுவதும் ரயிலில் பயணிக்கும் கிராமப் பகுதிகளைச் சேர்ந்த 15 சதவிகித பயணிகள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணிப்பதாகவும், அவர்களில் 10 முதல் 11 சதவிகிதம் பேர் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளிலும் ஐந்து சதவிகிதம் பேர் உயர் வகுப்புகளிலும் பயணிப்பதாகக் கூறிய அவர், மீதமிருக்கும் பயணிகள் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளிலேயே தங்கள் பயணங்களை மேற்கொள்வதாகவும் கூறினார். இதனால், பயணிகள் மற்றும் சரக்கு ரயில் சேவைகளுக்கான கட்டணத்தில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் கட்டணம் நிர்ணயிப்பதில் நெகிழ்வுத் தன்மை இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 

ரயில்நிலைய நடைமேடை

சரக்கு ரயில் சேவையைப் பொறுத்தவரையில் நாடு முழுவதும் 50 தனியார் டெர்மினல்கள் அமைக்க ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என ரயில்வே துறை விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார். அமெரிக்காவைப் பொறுத்தவரை மொத்த ரயில் சேவையில் 25 சதவிகிதம் மட்டுமே அரசின் கையில் இருக்கிறது. ரஷ்யாவில் ரயில் சேவைத் துறையில் அரசின் பங்களிப்பு இல்லை என்றும் அவர் கூறினார்.