`முன்னாள் பிரதமர்; 3 முதல்வர்கள்; 5 முன்னாள் முதல்வர்கள்!’ - மேற்குவங்கத்தில் மம்தா கூட்டும் பிரமாண்ட மாநாடு | Mamata Banerjee hosted United India Rally in Kolkata

வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (19/01/2019)

கடைசி தொடர்பு:10:30 (19/01/2019)

`முன்னாள் பிரதமர்; 3 முதல்வர்கள்; 5 முன்னாள் முதல்வர்கள்!’ - மேற்குவங்கத்தில் மம்தா கூட்டும் பிரமாண்ட மாநாடு

இந்தியாவில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்புகள் வரும் மார்ச் மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலுக்காகத் தேசிய கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் மிகவும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் அனைத்துக் கட்சிகளுக்குள்ளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பா.ஜ.க-வுக்கு எதிராக மிகப் பெரும் கூட்டணி அமைக்கும் திட்டமும் நடைபெற்று வருகிறது. 

எதிர் கட்சி தலைவர்கள்

முன்னதாக, மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மோடிக்கு எதிராகப் பெரிய கூட்டணி அமைத்து ஜனவரியில் மிகப் பெரும் பேரணி நடத்தப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி இன்று பிற்பகல் கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பேரேடு மைதானத்தில் ‘ஒற்றுமை இந்தியா பேரணி’ என்ற பிரமாண்ட மாநாடு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இதில் கலந்துகொள்ள நாடு முழுவதும் உள்ள பல கட்சித் தலைவர்களுக்கும் மம்தா அழைப்பு விடுத்துள்ளார். 

மம்தா நடத்தும் பிரமாண்ட மாநாடு

முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவ கௌடா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் குமாரசாமி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ் வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசிய வாத கங்கிரஸ் தலைவர் சரத்பவார், தி.மு.க தலைவர் ஸ்டாலின், ராஷ்ட்ரிய ஜனதா தள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ், ஃபருக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா மற்றும் பா.ஜ.க-வின் அதிருப்தி தலைவர்கள் போன்ற பலர் இன்று நடக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர். 

மம்தா நடத்தும் பிரமாண்ட மாநாடு

மேலும் இந்த மாநாட்டுக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள, ‘மோடி அரசின் பொய் வாக்குறுதிகளால் மக்கள் ஆத்திரமும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அனைத்து மக்களும் சமம், ஆண் பெண் மற்றும் சாதி பாகுபாடின்றி இருக்கும் இந்தியா உருவாகவே மக்கள் விரும்புகின்றனர். இவை அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரே கருத்துடைய எதிர்க்கட்சிகள் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்துள்ளன. இந்த ஒற்றுமை மாநாட்டுக்கு என் ஆதரவைத் தெரிவிக்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மம்தா பானர்ஜியுடன் ஸ்டாலின்

மம்தா பானர்ஜியின் இந்த மெகா மாநாடு கூட்டத்தில் சுமார் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மேற்கு வங்க மாநிலம் முழுவதிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொல்கத்தாவில் மட்டும் பல ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.