உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் குளறுபடி! - புதிய சர்ச்சையில் கேரள அரசு | Controversy erupted after kerala government submitted an affidavit in the Supreme Court

வெளியிடப்பட்ட நேரம்: 14:18 (19/01/2019)

கடைசி தொடர்பு:14:27 (19/01/2019)

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் குளறுபடி! - புதிய சர்ச்சையில் கேரள அரசு

சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து 50 வயதுக்குக் குறைவாக உள்ள பல பெண்கள் சபரிமலை செல்ல முயற்சி செய்தனர். அவ்வாறு வரும் பெண்களை அங்குள்ள இந்து அமைப்பினரும் ஆண் பக்தர்களும் தடுத்துத் திருப்பி அனுப்பினர். இதனால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகக் கேரளா முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. 

சபரிமலை

இதற்கிடையில் கடந்த 2-ம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து மற்றும் மலப்புரத்தைச் சேர்ந்த கனக துர்கா ஆகிய இரு பெண்களும் சபரிமலை சந்நிதானத்துக்குள் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்தனர். இவர்களின் தரிசனத்தை அடுத்து கேரளா முழுவதும் இந்த இரு பெண்களுக்கும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதனால் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் கனக துர்கா, பிந்து ஆகிய இருவருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க கேரள போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது.

பிந்து- கனக துர்கா

இந்த வழக்கு வாதத்தின்போது சபரிமலைக்கு அனைத்துப் பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, இதுவரை 50 வயதுக்கும் குறைவாக உள்ள  51 பெண்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்துள்ளதாகவும் அதில் 24 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதனுடன் பெண்களின் வயது மற்றும் ஆதார் தகவல்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த அறிக்கை மிகவும் தவறானது என ஆங்கில ஊடகமான என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது. 

உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டப் பிறகு, அடுத்த சில மணி நேரங்களில் அந்த அறிக்கை எங்களுக்கு (என்.டி.டி.வி) கிடைத்தது. அதில் இருந்த தமிழ்நாடு மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த 15 பெண்களின் விவரங்களை ஆதார் எண் மூலம் நாங்கள் சோதனை செய்தோம், தமிழகத்தைச் சேர்ந்த 42 வயதான தெய்வசிவகாமி என்ற பெண் சபரிமலை சென்றதாக அறிக்கையில் பெயர் இருந்தது. ஆனால், தெய்வசிவகாமி பெயரில் இருந்தது ஓர் ஆண்.  

சபரிமலை

இதே போன்று தமிழகத்தைச் சேர்ந்த மற்றொருவரிடம் நடத்திய விசாரணையில், ``நான் 1984-ம் ஆண்டு பிறந்தேன். என் தாய்தான் சபரிமலைக்குச் சென்றார். நானே 1984-ம் ஆண்டு பிறந்திருக்கும்போது என் தாய்க்கு எப்படி ஐம்பதுக்கும் குறைவான வயதாக இருக்க முடியும். அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் என் தாய் பெயர் உள்ளது ஆனால் அதில் அவரின் வயது தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

48 வயதான சந்திரா என்ற தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணின் பெயர் அரசு தாக்கல் செய்த அறிக்கையில் இருந்தது. அவரின் உறவினர்கள் சந்திராவின் வாக்காளர் அட்டையை எங்களிடம் (என்.டி.டி.வி) காண்பித்தனர். அதில் அவர் 1956-ம் ஆண்டு பிறந்தார் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படிப் பார்த்தால் சந்திராவுக்கு தற்போது 63 வயது. ஆந்திராவைச் சேர்ந்த பத்மாவதி என்பவருக்கு வயது 48 என இருந்தது. அவரிடம் தொடர்பு கொண்டு பேசியபோது தனக்கு 55 வயதாவதாக அவர் கூறினார். இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News Credits : NDTV