மணிப்பூரில் உள்ள ஒரு ஊடகத்தில் பத்திரிகையாளராக பணி புரிந்து வருபவர் கிஷோர் சந்திர வாங்கிம். இவர் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து தனது சமூக வலைதளபக்கத்தில் கருத்து பதிவிட்டு வந்தார். பின்னர் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், பிரதமர் மோடியின் கை பொம்மை போல் உள்ளார் என விமர்சித்தார். இதனால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மணிப்பூர் அரசு கடந்த நவம்பர் மாதம் கிஷோரை கைது செய்து சிறையில் அடைத்தது.
கிஷோரின் கைது கண்டிக்கத்தக்கது அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சக பத்திரிகையாளர்களும் அவரின் குடும்பத்தாரும் போராட்டம் நடத்தினர் இருந்தும் எந்த பயனும் இல்லை. தற்போது வரை அவர் சிறையிலேயே உள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிஷோர் சந்திர வாங்கிம்முக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘ தங்களின் தவறுகளை மறைக்க தற்போது அரசு ஒரு புதிய இயந்திரத்தைக் கையில் எடுத்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே மணிப்பூரில் அரசியலமைப்பும் மக்களின் உரிமைகளும் நசுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு நாங்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறோம்.
பிற்போக்கு சக்திகள் தண்டனை என்ற பெயரில் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகின்றன அதே நேரத்தில், மாநிலத்தில் பா.ஜ.கவுக்கு எதிராகச் செயல்படுபவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். பாசிச சக்திகள் இந்தியாவின் வளர்ச்சியை மட்டுமே அழித்து வருகின்றன ஆனால் அவர்களது எண்ணத்தை உடைக்க வேண்டும்” எனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.