’பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு ஏன்?’ பிரதமர் நரேந்திர மோடி பதில் | PM Modi says Upper caste quota is not for elections

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (21/01/2019)

கடைசி தொடர்பு:08:19 (21/01/2019)

’பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு ஏன்?’ பிரதமர் நரேந்திர மோடி பதில்

பொதுப் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா, கடந்த 14-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. 'இது மாபெரும் அநீதி' என்று சமூக நீதி இயக்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றன. 'அரசியல் ஆதாயத்துக்காகக் கொண்டுவரப்பட்ட சட்டம்' என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. 

இந்தச் சூழலில், ”எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை நிறைவேற்றினோம்” என்று, பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்துள்ளார். கோவா மற்றும் மகாராஷ்டிர மாநில பி.ஜே.பி தொண்டர்களிடம், வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலமாக உரையாடினார் மோடி. அப்போது, “இது நாட்டின் நலனுக்காக எடுக்கப்பட்ட வரலாற்று முடிவு. இந்தச் சட்டம், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களிம்  இட ஒதுக்கீட்டில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இது, எல்லாத் தரப்பினருக்கும் வாய்ப்பு கிடைக்கவே வழிவகைசெய்யும் ” என்றார்.

மோடி

தொடர்ந்து, ”நான் தேர்தலுக்காக இதையெல்லாம் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இதே சட்டத்தை சில மாதங்களுக்கு முன்னால் கொண்டுவந்திருந்தால், ஐந்து மாநிலத் தேர்தலுக்காகக் கொண்டுவருகிறேன் என்று சொல்லியிருப்பார்கள். அதற்கு முன்னால் கொண்டுவந்திருந்தால், கர்நாடகத் தேர்தலுக்காகக் கொண்டுவருகிறேன் என்று சொல்லியிருப்பார்கள். அதற்கு முன்னால் என்றால், குஜராத் தேர்தலுக்காகக் கொண்டுவருகிறேன் என்று சொல்லியிருப்பார்கள். இங்கே, எப்போதும் ஏதேனும் ஒரு தேர்தல் நடந்துகொண்டு தானிருக்கிறது. அதனால், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு அர்த்தமற்றது” என்றார்.

எதிர்க்கட்சிகளின் ‘மெகா கூட்டணிகுறித்துப் பேசியவர், “வாரிசு அரசியல் செய்பவர்களும் ஊழல்வாதிகளும் இணைந்து கூட்டணி அமைத்திருக்கிறார்கள். அவர்கள் பணபலத்தால் நிற்கிறார்கள். நாங்கள் மக்கள் பலத்தால் நிற்கிறோம்” என்றார்.