அமித் ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்கத் தடைபோட்ட மம்தா! | Mamata government denies permission to amit shah's chopper

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (21/01/2019)

கடைசி தொடர்பு:08:03 (21/01/2019)

அமித் ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்கத் தடைபோட்ட மம்தா!

மேற்கு வங்கத்தில், மம்தா அரசுக்கும் பி.ஜே.பி-க்கும் இடையேயான அரசியல் மோதல் உச்சக்கட்டத்தில் உள்ளது. கடந்த மாதம், மூன்று மாவட்டங்களில் ரதயாத்திரை நடத்தும் பணிகளை மேற்கொண்டது பி.ஜே.பி. ஆனால், 'சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும்' என்று கூறி தடைவிதித்தது மம்தா அரசு. அப்புறம், நீதிமன்றத்தை நாடி அனுமதி வாங்கினர் பி.ஜே.பி நிர்வாகிகள். ஆனாலும், மம்தா அரசின் கெடுபிடி தொடர்ந்ததால், ரத யாத்திரை முயற்சிகளை தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.

அமித் ஷா, மம்தா

இந்தச் சூழ்நிலையில், வரும் 22-ம் தேதி, மல்டா மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுசெய்துள்ளது பி.ஜே.பி. இதில் பங்கேற்பதற்காக, அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா வருகை தர உள்ளார். பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்ற பிறகு, அவர் கலந்துகொள்ளும் முதல் பொதுக்கூட்டம் இது. டெல்லியில் இருந்து கொல்கத்தா வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மல்டாவுக்குச் செல்வதாக உள்ளார். இந்த நிலையில், அவரது ஹெலிகாப்டரை மல்டா விமான நிலையத்தில் தரையிறக்க, அந்த மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. அது தொடர்பாக பி.ஜே.பி-க்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “மல்டா விமான நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் இன்னும் முழுமை அடையவில்லை. அதனால், அங்கே ஹெலிகாப்டரை தரையிறக்குவது பாதுகாப்பானதாக இருக்காது. தற்காலிக ஹெலிபேடும் தயார் நிலையில் இல்லை. ஆகவே, ஹெலிகாப்டரை தரையிறக்க அனுமதிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.

மம்தா

அனுமதி மறுப்பால் கொதித்துப்போயிருக்கும் பி.ஜே.பி நிர்வாகிகள், “மல்டா விமான நிலையத்தில் மாநில அரசின் ஹெலிகாப்டர்கள் தரையிறங்க அனுமதித்துவருகிறார்கள். ஆனால், அமித் ஷாவின் ஹெலிகாப்டருக்கு மட்டும் அனுமதி மறுக்கிறார்கள். ஏற்கெனவே, ரத யாத்திரையைத் தடுத்தார்கள். இப்போது பொதுக்கூட்டத்தையும் தடுக்கப்பார்க்கிறார்கள். அதற்காகத்தான் அமித் ஷா வருகைக்குத் தடை ஏற்படுத்துகிறார்கள். மேற்குவங்கத்தில் ஜனநாயகம் அழிந்துவருகிறது” என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

மல்டா மாவட்டத்தில், எல்லை பாதுகாப்புப் படையின் விமானதளம் ஒன்று இருக்கிறது. அங்கே, அமித் ஷா ஹெலிகாப்டரை தரையிறக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர், பி.ஜே.பி நிர்வாகிகள்.