கர்நாடக ரிசார்ட்டில் அடிதடி - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ | Congress has moved its MLAs to a resort amid allegations of horse trading

வெளியிடப்பட்ட நேரம்: 10:14 (21/01/2019)

கடைசி தொடர்பு:10:14 (21/01/2019)

கர்நாடக ரிசார்ட்டில் அடிதடி - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ

கர்நாடகாவில்,  காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் மதச் சார்பற்ற ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த குமாரசாமி முதல்வராக இருந்துவருகிறார். மொத்தமுள்ள 224 தொகுதிகளில், பா.ஜ.க 104 தொகுதிகளிலும் மதச் சார்பற்ற ஜனதா தளம் 37 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 78 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன. காங்கிரஸ், குமாரசாமிக்கு ஆதரவளித்ததால், அங்கு அவர் முதல்வராக நீடித்துவருகிறார். 

குமாரசாமி

குமாரசாமியின் ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க முயன்றுவருவதாகக் கூறப்படுகிறது. கர்நாடக நீர் மேலாண்மைத் துறை அமைச்சர் சிவக்குமார், கர்நாடகத்தில் பா.ஜ.க ’ஆபரேஷன் லோட்டஸை’த் தொடங்கியுள்ளதாகவும், மும்பையில் உள்ள ஹோட்டலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

பாஜக

இதற்கிடையில், காங்கிரஸில் இருந்து யாரும் கட்சி தாவாமல் இருக்க, அங்குள்ள 70-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ராம் நகர் மாவட்டம் பிடதி அருகில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களே இரு பிரிவினராகப் பிரிந்து, தங்களுக்குள் பலத்த சண்டையிட்டுவருவதாகச் செய்திகள் வெளியாகின. இதையடுத்து, தற்போது எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் அடிதடி மோதலில் ஈடுபட்டதாகவும், இந்த மோதலில் விஜய நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆனந்த் சிங் என்பவர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. அவர், தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கட்சி தொடர்பான பேச்சு வார்த்தையின்போது, கம்பிலி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ கணேஷ், கண்ணாடி பாட்டில் கொண்டு ஆனந்தை தலையில் அடித்ததாகவும், அதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது சொந்த விவகாரம் தொடர்பான மோதல்; அரசியல் ரீதியிலானது இல்லை என காங்கிரஸ் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலைகளால் கர்நாடக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவிவருகிறது.