பெண் புலியை அடித்துத் தின்ற ஆண் புலி! - இன அழிவின் தொடக்கமா? #MP | Tiger eats tigress in Madhya Pradesh

வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (21/01/2019)

கடைசி தொடர்பு:12:00 (21/01/2019)

பெண் புலியை அடித்துத் தின்ற ஆண் புலி! - இன அழிவின் தொடக்கமா? #MP

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில், கன்ஹா என்ற தேசியப் பூங்காவில் ஏராளமான காட்டு விலங்குகள் வாழ்ந்துவருகின்றன. அந்தப் பூங்காவில், மற்ற விலங்குகளைவிட புலிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படும். இந்த நிலையில், கன்ஹா பூங்காவில் எப்போதும் இல்லாத ஒரு விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

புலி

File Photo

ஒரு பெரிய ஆண் புலி, மற்றொரு பெரிய பெண் புலியை அடித்துக் கொன்று உணவாகத் தின்றுள்ளது. ஒரு புலி, தன் குட்டிகளை அடித்துத் தின்பது சாதாரணமான, பொதுவான ஒரு விஷயம். ஆனால், பெரிய புலி மற்றொரு பெரிய புலியைக் கொன்றது மிகவும் அரிதான விஷயம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

புலி

வனத்துறை பாதுகாவலர்கள் காட்டுக்குள் ரோந்துப் பயணம் மேற்கொள்ளும்போது, புலியின் எலும்புகள், பற்கள் சிதறிக் கிடப்பதைப் பார்த்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த  அதிகாரிகள் நடத்திய சோதனையில், பெண் புலி மற்றொரு ஆண் புலியால் கொல்லப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இறந்த புலியின் உடல் பாகங்கள், எலும்புகள் போன்றவை சோதனைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. 

புலி

 "பெண் புலியின் மேல் உள்ள காயங்களை வைத்து, அது மற்றொரு புலியால் கொல்லப்பட்டுள்ளதை நாங்கள் உறுதிசெய்தோம்" என கன்ஹா பூங்காவின் இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு,  ஒரு இன அழிவின் தொடக்கமாக இருக்கலாம் என்றும் ஒரே இடத்தில் அதிகமான புலிகள் வாழ்வதால்கூட ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். பெண் புலியைக் கொன்ற ஆண் புலிக்கு போதுமான உணவுகள் வழங்கப்பட்டபோதிலும், இதுபோன்ற ஒரு செயலில் அது ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.