இந்தியக் குடியுரிமையை ஒப்படைத்தார் பி.என்.பி வங்கி மோசடி மன்னன் மெஹுல் சோக்ஸி! | Mehul Choksi surrenders Indian citizenship, passport

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (21/01/2019)

கடைசி தொடர்பு:15:30 (21/01/2019)

இந்தியக் குடியுரிமையை ஒப்படைத்தார் பி.என்.பி வங்கி மோசடி மன்னன் மெஹுல் சோக்ஸி!

ஆண்டிகுவா நாட்டில் பதுங்கியுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி மன்னர்களில் ஒருவரான மெஹுல் சோக்ஸி, தனது இந்தியக் குடியுரிமை மற்றும் பாஸ்போர்ட்டை ஆண்டிகுவா நாட்டிடம் ஒப்படைத்தார். 

மெஹுல் ஜோக்ஸி

'திருடத் தெரிந்தவனுக்கு பதுங்கத் தெரியணும்' என்ற பழமொழிக்கேற்ப, வங்கி மோசடிகளில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்குத் தப்பியோடியவர்கள், பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, சிபிஐ வசமிருந்து சாதுர்யமாகத் தப்பிவருவது வழக்கமாகி வருகிறது. லண்டனில் பதுங்கியிருந்த விஜய் மல்லையாவைக் கைதுசெய்து இந்தியாவுக்குக் கொண்டுவர சிபிஐ  முயற்சித்தபோது, இந்திய சிறைச்சாலை இருட்டாக இருக்கும், கழிப்பறை சுத்தமாக இல்லை, உணவு தரமாக இல்லை, முறையான மருத்துவ சிகிச்சைகள் தரப்படுவது இல்லையென்று பல்வேறு குறைகளைக்கூறி தட்டிக்கழித்துவந்தார். இறுதியில், அவரை இந்தியாவிற்கே நாடு கடத்தவேண்டுமென்று, லண்டன் நீதிமன்றம் கடந்த 2018, டிசம்பரில் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. 

விஜய் மல்லையாவுக்குத் தரப்பட்ட உத்தரவு, ஆண்டிகுவா நாட்டில் பதுங்கியிருந்த பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியாளர்களில் ஒருவரான மெஹுல் சோக்ஸியை அதிகம் சிந்திக்கவைத்தது. தன்னையும் இந்தியாவிற்கு நாடுகடத்துவார்களோ என்று எண்ணியவர், தனது இந்தியக்குடியுரிமை மற்றும் பாஸ்போர்ட்டை ஆண்டிகுவா தூதரகத்தில் ஒப்படைத்தார். இதன்மூலம், தான் இனிமேல் இந்தியக்குடிமகன் இல்லை என்றும், ஆண்டிகுவா நாட்டின் குடிமகனாக மட்டுமே உள்ள தன்னை இந்தியாவிற்கு நாடு கடத்தக் கூடாதென்றும் சொல்லாமல் சொல்லப்பார்க்கிறார்.

மெஹுல் ஜோக்ஸி

இவர், கடந்த 2018 ஜனவரி 15ல் ஆண்டிகுவா & பார்படாஸ் நாட்டிற்குத் தப்பியோடிவந்து, அந்நாட்டின் குடியுரிமையைப் பெற்றிருந்தார். அதன்பின்னர் சில நாள்கள் கழித்து, ஜனவரி 29-ம் தேதிதான் இவர்மீதும், இவரது உறவினர் நீரவ் மோடி மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.