``அல்வாவுடன் தொடங்கிய பட்ஜெட் தயாரிப்பு பணி!" - ருசிகரமான தகவல்! | central government interim budget process starts with halwa

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (21/01/2019)

கடைசி தொடர்பு:21:20 (21/01/2019)

 ``அல்வாவுடன் தொடங்கிய பட்ஜெட் தயாரிப்பு பணி!" - ருசிகரமான தகவல்!

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கலாகிறது. மோடி அரசின் இறுதி பட்ஜெட் என்பதால் விறுவிறுப்புடன் பட்ஜெட் தயாரிப்பு பணி நடைபெறுகிறது. பட்ஜெட் ஷரத்துகள் இறுதி வடிவம் பெற்றவுடன், அவற்றை நகல் எடுக்கும் பணி நடைபெறும். இன்று ஜனவரி 21-ம் தேதி காலை அல்வாவை வெட்டி கொண்டாடி அப்பணி தொடங்கப்பட்டது.

பட்ஜெட் அல்வா

அல்வாவுக்கும், பட்ஜெட்டுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா... பட்ஜெட் நகல் எடுக்கும் பணி தொடங்கும் தினத்தில், அப்பணியில் ஈடுபடும் அதிகாரிகள் அனைவரும் நிதித்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும். அவர்களுக்குப் பெரிய கடாயில் சமைத்த சுவையான அல்வா அளிக்கப்படும். அதை கையில் வாங்கிய பிறகு, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கலாகும் வரை அவர்கள் வீட்டுக்குச் செல்ல முடியாது. அதை குறியீடாக உணர்த்தவே ஒவ்வோர் ஆண்டும் அல்வா சடங்கு நடைபெறுகிறது. 

வழக்கமாக இச்சடங்கில் நிதியமைச்சர் கலந்துகொள்வார். சிகிச்சைக்காக நிதியமைச்சர் அருண் ஜெட்லி அமெரிக்கா சென்றுள்ள நிலையில், இந்நிகழ்வில் அவர் கலந்துகொள்ளவில்லை. நிதித்துறை இணை அமைச்சர் சிவ பிரகாஷ் சுக்லா, மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டனர்.