`அவர் எங்களுக்கும் அம்மாதான்; தனித்து விட மனமில்லை’- மும்பை காவல்துறையினருக்குக் குவியும் பாராட்டுகள் | mumbai police celebrates senior citizen birthday

வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (22/01/2019)

கடைசி தொடர்பு:10:35 (22/01/2019)

`அவர் எங்களுக்கும் அம்மாதான்; தனித்து விட மனமில்லை’- மும்பை காவல்துறையினருக்குக் குவியும் பாராட்டுகள்

பிறந்த நாள்


`காவல்துறை உங்கள் நண்பன்’ காவல் நிலையங்கள் சென்ற நண்பர்களுக்குத்தான் அந்த அனுபவங்கள் தெரியும். சில காவலர்களின் செயலால் ஒட்டுமொத்த காவல்துறையினரையும் நாம் வேறொரு கண்ணோட்டத்துடனே பார்க்கிறோம். ஆனால், மும்பைக் காவல்துறையினர் 85-வயதுப் பெண்மணியின் பிறந்தநாளைக் கொண்டாடி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். சமூக வலைதளத்தில் மும்பை காவல்துறையினருக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. 

மும்பையைச் சேர்ந்த வயதான பெண்மணி லலிதா சுப்ரமணியம். இவருக்கு மூன்று குழந்தைகள். இரண்டு பிள்ளைகள் அமெரிக்காவிலும் ஒருவர் பெங்களூருவிலும் செட்டில் ஆகிவிட்டனர். லலிதா மட்டும் தனியாகக் கடந்த சில ஆண்டுகளாக மும்பையில் வசித்துவருகிறார். மும்பை மட்டுங்கா (Matunga) காவல்நிலையத்தில், மூத்த குடிமக்கள் பாதுகாப்புப் பட்டியலில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது. இவருக்குத் தேவைப்படும் உதவிகளை காவல்துறையினர் கடந்த சில ஆண்டுகளாகச் செய்துவருகின்றனர். அவசர உதவிகளுக்காக எப்போது வேண்டுமானாலும் லலிதா சுப்ரமணியம் காவல்துறையினரைத் தொடர்புகொள்ளலாம். கடந்த 2016-ம் ஆண்டு முதல் இவரது பிறந்தநாளை மட்டுங்கா காவல்நிலைய அதிகாரிகள் கொண்டாடிவருகின்றனர். பிறந்தநாள் தினத்தில் கேக் வெட்டி, பரிசுகள் கொடுத்து அவரை சந்தோஷத்தில் ஆழ்த்திவருகின்றனர். பிறந்தநாள் தினத்தில் தனியாக இருக்கிறோம் என்ற உணர்வு அவருக்கு ஏற்படாமல் இருக்க இவ்வாறு செய்துவருகின்றனர். மேலும், இவர்கள் அனைவரும் லலிதாவை அம்மா என்றே அழைக்கின்றனர்.

மும்பை காவல்துறை

இதுதொடர்பாகப் பேசியுள்ள பெண் காவல் அதிகாரி ஒருவர், ``அம்மா (லலிதா சுப்ரமணியம்) எங்களுக்கு மிகவும் முக்கியமானவர். கடந்த 40 வருடங்களாக மட்டுங்கா காவல்நிலைய அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளார். எனக்கு மட்டும் அல்ல என்னுடன் பணிபுரியும் சக காவலர்கள், உயர் அதிகாரிகள் அனைவருக்கும் இவர் மிகவும் முக்கியமானவர். அம்மாவிடம் எங்கள் அனைவருடைய மொபைல் எண்ணும் உள்ளன. அவருக்கு ஏதாவது பிரச்னை அல்லது மருந்தகங்களுக்குச் செல்ல வேண்டும் என்றால், உடனே எங்களைத் தொடர்புகொள்வார். அவருக்கான உதவிகளை நாங்கள் செய்வோம்” என்றார்.

பெற்ற பிள்ளைகளே தங்களது பெற்றோர்களைக் கவனிக்காமல் முதியோர் இல்லங்களில் விடும் இந்தக் காலத்தில், மும்பை காவல்துறையினர் இந்த வயதான பெண்மணிக்குத் தேவையான உதவிகளைச் செய்வது, அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. தங்களது தாயைப் போன்று எண்ணி அவருக்கான உதவிகளைச் செய்துவருகின்றனர். உண்மையில் இந்த லலிதா சுப்ரமணியம் அதிர்ஷ்டக்காரர்தான். மும்பை காவல்துறையினருக்கு ஒரு சல்யூட்.