‘மோடி ஆக்‌ஷன் ஹீரோ; மம்தா பிரதமர் பதவிக்குத் தகுதியானவர்’ - பா.ஜ.க தலைவரின் சர்ச்சை பேட்டி | Mamata Banerjee perfect for PM says Shatrughan Sinha

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (22/01/2019)

கடைசி தொடர்பு:14:20 (22/01/2019)

‘மோடி ஆக்‌ஷன் ஹீரோ; மம்தா பிரதமர் பதவிக்குத் தகுதியானவர்’ - பா.ஜ.க தலைவரின் சர்ச்சை பேட்டி

வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில்,  மத்திய சுகாதாரத் துறை அமைச்சராகப் பதவி வகித்தவர், சத்ருகன் சின்ஹா. மோடி அரசின்மீது ஏற்பட்ட அதிருப்தியினாலும் பி.ஜே.பி-யில் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டினாலும் அவர் தற்போது கட்சி நடவடிக்கைகளில் ஈடுபாடு செலுத்தாமல் இருந்துவருகிறார்.  சமீபகாலமாக, பிரதமர் மோடியின் கருத்துகளுக்கு அவர் பதிலளிப்பதுடன், தொடர்ந்து தாக்கிப் பேசியும்வருகிறார். 

சத்ருகன் சின்ஹா

சில தினங்களுக்கு முன்பு, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஏற்பாடுசெய்திருந்த மெகா பொதுக்கூட்டத்திலும் இவர் கலந்துகொண்டு பா.ஜ.க அரசுக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருந்தார்.

மோடி

இந்நிலையில், ஐ.ஏ.என்.எஸ் ஊடகத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “ எனக்கு பா.ஜ.க-வில் ஒரே ஒரு மோடியை மட்டும்தான் தெரியும். அவர், உண்மையில் அதிரடி நாயகன். அது, நம் பிரதமர் நரேந்திர மோடிதான். மோடி என்ற பெயரைப் பயன்படுத்தி சிலர் விளம்பரம் தேட முயற்சி செய்கிறார்கள். அவர்களுக்குக் கூறுங்கள், மோடி என்பது ஒருவரே” என்று பேசியுள்ளார். இவர், பா.ஜ.க-வில் உள்ள சுஷில் குமார் மோடியைச் சுட்டிக்காட்டித்தான் இவ்வாறு பேசினார் எனக் கூறப்படுகிறது.

மம்தா பானர்ஜி

தொடர்ந்து கூறிய சத்ருகன் சின்ஹா, “இந்தக் கட்சியின் மேலிடம் அதிக கட்டளைகளை விதித்தால், நான் நிச்சயமாக பா.ஜ.க-வை விட்டு விலகிவிடுவேன். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் பதவிக்கு மிகவும் தகுதியானவர். அவரின் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, தன் மாநிலத்துக்காக அவர் நிறையத் தியாகங்கலைச் செய்துள்ளார். அவர் அடிமட்டத்திலிருந்து வந்து, தற்போது ஏழைகளுக்காகப் பணியாற்றிவருகிறார். அடுத்த பிரதமராகும் வாய்ப்பு மம்தாவுக்கு உள்ளது. தற்போதைய பிரதமர் மோடி, மக்களிடம் இருந்து விலகி நிற்கிறார். அதனால், மக்கள் இந்த ஆட்சியின்மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர். மம்தா ஒரு சிறந்த நிர்வாகி” என்று கூறியுள்ளார்.