``உணவு சமைத்தேன், பாத்திரங்கள் கழுவினேன்!'' - பழைய வாழ்க்கையை நினைவுகூர்ந்த மோடி  | ''We cleaned utensils at RSS office ''says Modi

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (23/01/2019)

கடைசி தொடர்பு:14:30 (23/01/2019)

``உணவு சமைத்தேன், பாத்திரங்கள் கழுவினேன்!'' - பழைய வாழ்க்கையை நினைவுகூர்ந்த மோடி 

ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் உணவு தயாரிப்பது மட்டுமல்லாமல் பாத்திரங்கள் கழுவியதாகப் பிரதமர் மோடி 'ஹியூமன்ஸ் ஆஃப் இந்தியா' ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி பிரபல ஹியூமன்ஸ் ஆஃப் பாம்பே ஃபேஸ்புக் பக்கத்தில் தன் இளமைக்காலம் பற்றி தொடர் எழுதி வருகிறார். அதில், `` நான் ஒருமுறை இமயமலையிலிருந்து அகமதாபாத் திரும்பினேன். அகமதாபாத் பெரிய நகரம். அங்கே வசிப்பது புதிய வாழ்க்கையாகத் தென்பட்டது. அடுத்தவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எனக்குள் மேலோங்கி இருந்தது. என் மாமாவின் கேன்டினில் கொஞ்சக் காலம் வேலை பார்த்தேன். இதே காலகட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் முழு நேர ஊழியராக என்னை இணைத்துக் கொண்டேன். அங்கேயே தங்கிக் கொண்டேன். பலதரப்பட்ட மக்களை அப்போது நான் சந்திக்க முடிந்தது. நண்பர்களுக்கு உணவு சமைப்பது, டீ போடுவது, பாத்திரங்கள் கழுவுவது என வாழ்க்கை பிசியாக போய்க் கொண்டிருந்தது. 

மோடி

ஆனாலும், நேரம் கிடைக்கும்போது இமயமலை செல்வதை வழக்கமாக வைத்திருந்தேன். ஒவ்வொரு தீபாவளி சமயத்திலும் 5 நாள்கள் காட்டுக்குள் போய் விடுவேன். 5 நாள்களுக்குத் தேவையான உணவை எடுத்துக்கொள்வேன். சுத்தமான தெளிந்த நீரோடைகளைக் காண்பேன். மனித நடமாட்டம் இல்லாத வனத்தில் காலார உலவுவேன். செய்தித்தாள்கள் இல்லை, தொலைக்காட்சி, ரேடியோ கிடையாது. தனியாக இருக்கும் இந்த நேரத்தில் என்னை மேன்மேலும் பலப்படுத்திக்கொள்ள முடிந்தது. உங்கள் பிசியான பணிகளிலிருந்து சில நாள்கள் வனத்துக்குள் சென்று அமைதியான வாழக்கையில் வாழ்ந்து பாருங்கள். உங்களை நீங்கள் உணர முடியும். உண்மையான உலகத்தைக் காண முடியும். வெளிச்சம் உங்களுக்குள்தான் இருக்கிறது. அதை வெளியே தேட அவசியம் இல்லை '' என எழுதியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க