எந்தெந்தக் கட்சிக்கு எவ்வளவு நன்கொடை கிடைத்தது? #VikatanInfographics | Which national party received more donation from corporate companies in 2017 - 2018?

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (23/01/2019)

கடைசி தொடர்பு:18:00 (23/01/2019)

எந்தெந்தக் கட்சிக்கு எவ்வளவு நன்கொடை கிடைத்தது? #VikatanInfographics

கடந்த 2017-18 ஆண்டில், 6 தேசியக் கட்சிகளும் இணைந்து பெற்ற நன்கொடை 470 கோடி ரூபாய். இதில் பாரதிய ஜனதா கட்சி 437 கோடி ரூபாய் நன்கொடை பெற்று முதலிடம் வகிக்கிறது.

எந்தெந்தக் கட்சிக்கு எவ்வளவு நன்கொடை கிடைத்தது? #VikatanInfographics

ந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. இங்கு தேர்தல் என்பது ஆட்சி மாற்றம் என்பதோடு மட்டுமல்லாமல், மிகப்பெரிய திருவிழாவாக நிகழும். இந்தியத் தேர்தல்களை வேடிக்கை பார்ப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் கிளம்பி வருகின்றனர். தேர்தல்கள் திருவிழாக்களாக மாறுவதற்கு அரசியல் கட்சிகளும், அவை மேற்கொள்ளும் பிரசாரங்களுமே காரணம். தேர்தல்களில் வாக்குகளைக் கவர்வதற்காக கட்சிகள் பணத்தைத் தாராளமாகச் செலவு செய்கின்றன என்பது அனைவரும் அறிந்த ரகசியம்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் அளிக்கும் நன்கொடைகள், அரசியல் கட்சிகளால் நடத்தப்படும் பத்திரிகைகளின் விற்பனை போன்றவற்றைக் கொண்டே கட்சிகள் தங்கள் செலவுகளைப் பார்த்துக்கொள்கின்றன. எந்த ஒரு கட்சியும் நன்கொடையாக `இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் பணமாகப் பெறக் கூடாது' என்பது விதி. அந்தத் தொகைக்கு அதிகமாக நன்கொடை அளிப்பவர்களின் விவரங்கள் சேமிக்கப்பட வேண்டும் என்பதும் இந்த விதியில் அடங்கும். பெரும்பாலான கட்சிகள் தங்களுக்கு வரும் நன்கொடைகளை 2,000 ரூபாய் விகிதங்களில் பிரித்து, நன்கொடை அளிப்பவர்களின் பெயர் விவரங்களை மறைத்து விடுகின்றன.

நன்கொடை அளிக்கும் தொகை மிகவும் குறைவானதாக இருந்தால் இந்த வரையறைகள் பொருந்தும். கோடிக்கணக்கான பணத்தை நன்கொடையாக அளிப்பவர்கள், பெரும்பாலும் கார்ப்பரேட் நிறுவனங்கள்தாம். அதுபோன்று அதிக தொகை நன்கொடையாக அளிக்கப்படும் போது, அதைத் தேர்தல் அறக்கட்டளைகள் மூலமாக அந்த நிறுவனங்கள் அளிக்கின்றன. 

ராகுல் காந்தி - ரத்தன் டாடா

சமீபத்தில் ஏ.டி.ஆர் எனப்படும் ஜனநாயகச் சீர்திருத்தத்திற்கான சங்கம் (Association of Democratic Reforms) என்னும் அமைப்பு, தனது அறிக்கையில் தேர்தல் நன்கொடையாகத் தேசியக் கட்சிகள் பெற்றுள்ள பண விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தேசியக் கட்சிகளாக 7 கட்சிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 20,000 ரூபாய்க்கு மேல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் மட்டும் இந்த அறிக்கையில் கணக்கிடப்பட்டுள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி 20,000 ரூபாய்க்கு மேல் நன்கொடை பெறவில்லை எனக் கூறியுள்ளது.

கடந்த 2017-18-ம் ஆண்டில், ஆறு தேசியக் கட்சிகளும் இணைந்து பெற்ற நன்கொடை 470 கோடி ரூபாய். இதில் பாரதிய ஜனதா கட்சி 437 கோடி ரூபாய் நன்கொடை பெற்று, தேசியக் கட்சிகளிலேயே முதலிடம் வகிக்கிறது. இதில் பாரதிய ஜனதா கட்சிக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும் நன்கொடையாக அளித்த தொகை 400 கோடி ரூபாய். காங்கிரஸ் கட்சி மொத்தமாக 27 கோடி ரூபாயை நன்கொடையாகப் பெற்றுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள், காங்கிரஸ் கட்சிக்கு 17 கோடி ரூபாய் அளித்துள்ளன. 

தேசியக் கட்சிகளுக்கு அதிக அளவில் நன்கொடை நிதி அளித்தவை கார்ப்பரேட் நிறுவனங்கள் என்றாலும், நன்கொடை அளிப்பதற்குத் தேர்தல் அறக்கட்டளைகள் பயன்படுத்தப்படுகின்றன. பி.ஜே.பி, காங்கிரஸ் இரண்டுக்கும் அதிக அளவில் நன்கொடை அளித்திருப்பது ப்ரூடென்ட் தேர்தல் அறக்கட்டளை. ஏர்டெல் நிறுவனத்தின் தாய் நிறுவனமான `பாரதி' இந்த அறக்கட்டளையை நிர்வகிக்கிறது. இந்த அறக்கட்டளைக்குப் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் பணம் அளிக்கின்றன. அந்தப் பணம் இப்படியான அறக்கட்டளைகள் மூலம் கட்சிகளைச் சென்று சேர்கின்றன. நிதி அளிக்கும் நிறுவனத்திற்கும், நன்கொடை பெறும் கட்சிகளுக்கும் மட்டுமே இந்தப் பரிவர்த்தனையின் விவரங்கள் தெரியும். 

கட்சிகள்

இதன் மூலம், நிறுவனங்கள் தாங்கள் நன்கொடை அளிக்கும் கட்சி வெற்றிபெற்றாலும், தோல்வியடைந்தாலும், ஆளுங்கட்சியின் நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க முடியும் எனக் கருதப்படுகிறது. இந்தப் பணம் தேர்தல் பிரசாரங்களுக்காகச் செலவிடப்படுகின்றன. கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு முதலீடாக அமைகின்றன.

உதாரணமாக, ஒரு சிறு வர்த்தகர் தன் தொகுதியில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்குப் பண உதவி செய்தால், அந்த வேட்பாளர் வெற்றியடைந்த பிறகு, அந்த வர்த்தகரின் வியாபாரம் பெருகுவதற்கான திட்டங்கள் உருவாக்கப்படும்; அந்த வியாபாரம் பாதுகாக்கப்படும். மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், மிகப்பெரிய தேசியக் கட்சிகளுக்கும் இது பொருந்தும். இதன்மூலம் ஆட்சிக்கு வரும் கட்சி, தங்களுக்கு நன்கொடை அளித்த கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்கேற்ப, கொள்கைகளையும், திட்டங்களையும் வகுக்கும். இந்த நிறுவனங்களுக்கு வரிவிலக்கு அளிப்பதில் தொடங்கி அரசு தரும் அனைத்துச் சலுகைகளும் அளிக்கப்படும். 

நரேந்திர மோடி - ராகுல் காந்தி

ஸ்டெர்லைட் ஆலையின் நிறுவனரான அனில் அகர்வாலிடம் பி.ஜே.பி, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு நன்கொடை பெற்றுள்ளன. `வெளிநாடுகளிலிருந்து பண உதவி பெறக் கூடாது' என்னும் சட்டத்தைச் சுட்டிக்காட்டி, டெல்லி உயர் நீதிமன்றம் இரண்டு கட்சிகளையும் எச்சரித்தது. 2016-ம் ஆண்டு, பி.ஜே.பி. அரசு கொண்டுவந்த சட்டத்திருத்தம் மூலம், `வெளிநாட்டு நிறுவனங்களிடம் பணம் பெறுவது குற்றம்; ஆனால் அதே நிறுவனங்கள் இந்தியர்களால் நடத்தப்பட்டால், இந்தியாவில் முதலீடுகள் செய்யப்பட்டால் குற்றம் இல்லை' என மாற்றப்பட்டது. `ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்களை இன்றுவரை அரசும் காவல்துறையும் கண்காணிப்பதன் காரணம் இதுதான்' எனக் கருதப்படுகிறது.

ஆக, இந்தியாவில் தேர்தல் கூட்டணி என்பது கட்சிகளுக்கு இடையே நிகழ்வது மட்டுமல்ல; கட்சிகளுக்கும், அவர்களுக்கு நன்கொடை தரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இடையிலானது என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. இதில் பாதிக்கப்படுபவர்கள் ஒவ்வொரு தேர்தலிலும், கால் வலிக்க வரிசையில் நின்று, வாக்கு செலுத்தி, `ஒரு விரல் புரட்சி' நிகழ்த்தியதாகப் பெருமைகொள்ளும் சாமான்ய மனிதர்களே. 


டிரெண்டிங் @ விகடன்