’’அப்பாவை கொலை பண்ணிருக்காங்க!’’ இறுதி யாத்திரையில் சுட்டிக் காட்டிய 4 வயது சிறுமி | It's Murder, not suicide... reveals Four year old girl

வெளியிடப்பட்ட நேரம்: 10:47 (24/01/2019)

கடைசி தொடர்பு:10:47 (24/01/2019)

’’அப்பாவை கொலை பண்ணிருக்காங்க!’’ இறுதி யாத்திரையில் சுட்டிக் காட்டிய 4 வயது சிறுமி

இரண்டு அங்கிள்களில் ஒருவர் குண்டாகவும், இன்னொருவர் ஒல்லியாகவும் இருந்ததாகக் கூறினாள். அந்த ஒல்லியான அங்கிள்தான் கையில் துப்பட்டாவோடு அப்பாவை மேல்மாடிக்குத் தூக்கிச் சென்றதாகவும் கூறினாள். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மம்தாவுக்கு, இது தற்கொலையல்ல, கொலைதான் என்பது புரிந்தது.

’’அப்பாவை கொலை பண்ணிருக்காங்க!’’ இறுதி யாத்திரையில் சுட்டிக் காட்டிய 4 வயது சிறுமி

உத்தரப்பிரதேசத்தில் உள்ள புலந்த்சர் நகரைச் சேர்ந்த சந்தோஷ் ராகவ் (31 வயது), எலெக்ட்ரீஷியனாகப் பணியாற்றிவருகிறார். அவரின் மனைவி, தனியார் நிறுவன ஊழியர். இவர்களுக்கு 4 வயது மகளும், 2 வயது மகனும் உள்ளனர். கடந்த சனிக்கிழமை, வசித்துவந்த வாடகை வீட்டின் மாடியில் இவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. அவரின் மனைவி மம்தா, வேலை முடிந்து இரவு வீடு திரும்பியபோது, தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த கணவரின் உடலைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். குழந்தைகள் இருவரும் என்ன நடந்ததென்றே தெரியாமல், பக்கத்து அறையில் உறங்கிக்கொண்டிருந்தனர்.

கொலை

தற்கொலை செய்துகொண்ட சந்தோஷின் உடல், மறுநாள் தகனம் செய்யப்படுவதாக இருந்தது. ஒரு வாகனத்தில் சந்தோஷின் உடலை ஏற்றிக்கொண்டு அவரின் உறவினரும், இன்னொரு வாகனத்தில் சந்தோஷின் மனைவி மற்றும் குழந்தைகளும் பயணித்தனர். குழந்தைகள் இருவரும் உறங்கியபடியே உடன் வந்தனர். அப்பா தற்கொலை செய்ததைப் பார்த்த அதிர்ச்சியில் உறக்கத்தில் இருப்பதாக மம்தா கருதினார். இறுதி யாத்திரை சென்றுகொண்டிருந்தபோது, மகள் கண்விழித்து அப்பாவைப் பற்றி விசாரிக்க, அப்பாவை இன்னொரு வாகனத்தில் எடுத்துச் சென்றுகொண்டிருப்பதாக மம்தா கூறினார். அப்போது, ``அந்த அங்கிள்கள் எங்கே?" என்று அம்மாவிடம் அவள் விசாரித்திருக்கிறாள். அவள் எந்த அங்கிளைப் பற்றி விசாரிக்கிறாள் எனப் புரியாமல் அம்மா விழிக்க, ``அப்பாவைப் பார்க்க வந்த அங்கிள்கள்" என்று கூறியிருக்கிறாள்.

மகள் கூறுவது கேட்டு குழப்பமடைந்த மம்தா, ``நேற்று இரவு வீட்டில் என்ன நடந்தது?'' என்று மகளிடம் கேட்டிருக்கிறார். அப்பா தனக்கு வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்ததாகவும், அப்போது அவரைக் காண இரண்டு பேர் வீட்டுக்கு வந்ததாகவும் கூறினாள். ஏதோ நடந்திருக்கிறது என யூகித்த மம்தா, அடுத்து என்ன நடந்தது என மகளிடம் கேட்டார். இரண்டு பேரும் அப்பாவோடு பேசியபடி அவருக்கு மதுவை அருந்தக் கொடுத்ததாகவும், அப்பா சோர்வடைந்ததால் இருவரும் சேர்ந்து திடீரென அப்பாவைத் தாக்கிக் கொலை செய்ததாகவும் தெரிவித்தாள். அதைப் பார்த்து பயந்து பக்கத்து அறையில் சென்று ஒளிந்துகொண்டதாகவும், அப்படியே தூங்கிவிட்டதாகவும் கூறினாள். 

கொலை

வீட்டுக்கு வந்த இருவரும் எப்படி இருந்தார்கள் என்று அவளிடம் மம்தா விசாரிக்கவும், இருவரில் ஒருவர் குண்டாகவும், இன்னொருவர் ஒல்லியாகவும் இருந்ததாகக் கூறினாள். அந்த ஒல்லியான அங்கிள்தான் கையில் துப்பட்டாவோடு அப்பாவை மேல்மாடிக்குத் தூக்கிச் சென்றதாகக் கூறினாள். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மம்தாவுக்கு, இது தற்கொலையல்ல, கொலைதான் என்பது புரிந்தது. உடனே இறுதி யாத்திரையை நிறுத்திவிட்டு, வாகனத்தைக் காவல் நிலையத்துக்குத் திருப்பச் சொன்னார். தன் மகள் கூறிய அனைத்துத் தகவல்களையும் போலீஸாரிடமும் விவரித்துக் கூறினார். குழந்தையிடம் விசாரணை நடத்திய போலீஸார், அவளையே கொலையைக் கண்ட சாட்சியமாகப் பதிவுசெய்துகொண்டனர். 

பக்கத்து வீடுகளில் விசாரித்தபோது, அவர்களும் சம்பவம் நடப்பதற்கு முன்னர் இரண்டு பேர் சந்தோஷின் வீட்டுக்குச் சென்றதாகக் கூறினார்கள். எனவே, இரண்டு பேர் இணைந்து சந்தோஷைக் கொலைசெய்தது உறுதியானது. நான்கு வயதுச் சிறுமியின் திடீர் சாட்சியத்தால், சந்தோஷ் ராகவின் தற்கொலை, கொலை வழக்காக மாற்றப்பட்டிருப்பது, அந்தப் பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலைக்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதை விசாரணை செய்வதோடு, அந்த இரண்டு கொலையாளிகளை நொய்டா போலீஸார் தேடிவருகின்றனர்.


டிரெண்டிங் @ விகடன்