`எங்கே அவர் கூறிய நல்ல நாள்?’ - ராகுல் காந்தி கடும் விமர்சனம் | BJP only creates fight among people says rahul gandhi

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (24/01/2019)

கடைசி தொடர்பு:16:40 (24/01/2019)

`எங்கே அவர் கூறிய நல்ல நாள்?’ - ராகுல் காந்தி கடும் விமர்சனம்

வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தேசிய கட்சிகள் முதல் மாநிலக் கட்சிகள் வரை அனைவரும் மிகவும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன் சொந்தத் தொகுதியான உத்தரப்பிரதேசத்தில் உள்ள அமேதிக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சென்றிருக்கிறார். 

ராகுல் காந்தி

நேற்று அமேதிக்குச் சென்ற அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். ’அமேதியின் எம்.பி’  ‘வருங்கால பிரதமர்’ என்ற கோஷங்களுடன் அவரை வரவேற்றனர். அங்கு ராகுல் காந்தி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

ராகுல் காந்தி

இன்று  காங்கிரஸ் தொண்டர்கள் முன் பேசிய அவர், ``அமேதி என்னுடைய தொகுதி என்ற ஒரு காரணத்துக்காக இங்கு எந்த நலத் திட்டங்களையும் செயல்படுத்தப் பிரதமர் மோடி மறுக்கிறார். தற்போது தடைப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்படும். உணவுப் பூங்காவில் 40 உணவுப் பதனிடும் அலகுகள் அமைக்கப்படும் அதன்மூலம் லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை கிடைக்கும் என மோடி அறிவித்தார். ஆனால், இதுவரை அதைச் செயல்படுத்தவில்லை. அவர் அமேதி மக்களையும் உத்தரப்பிரதேச மக்களையும் ஏமாற்றி வருகிறார். 

ராகுல் காந்தி

மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ஏதேனும் ஒரு பணக்காரர் தெருவில் வரிசையில் நின்று நீங்கள் பார்த்தீர்களா. ஆனால், ஏழை மக்கள்தான் வரிசையில் நின்று மிகவும் சிரமப்பட்டனர். நம் மக்கள் அனைவரும் தொழிலதிபர்களுக்காக கடுமையாக உழைக்க வேண்டும் என பா.ஜ.க விரும்புகிறது. ஆனால், நாம் பயன்படுத்துவது மட்டும் சீனப் பொருள்கள். மக்களிடையே இந்து, முஸ்லிம் பிரிவினையை ஏற்படுத்தியது பா.ஜ.கதான். இதன் விளைவாக குஜராத்தில் இருந்த உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மக்கள் வெளியேற்றப்பட்டனர். மோடி கூறிய நல்ல நாள் எங்கே. அவர் தொழிலதிபர்களுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்துள்ளார்” எனக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.