`இரண்டு குழந்தைகளுக்குமேல் வைத்திருப்பவர்களின் ஓட்டுரிமையைப் பறிக்க வேண்டும்!' - பாபா ராம்தேவ் | Snatch Away Voting Rights Of People Who Have More Than Two Kids: Ramdev

வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (24/01/2019)

கடைசி தொடர்பு:18:45 (24/01/2019)

`இரண்டு குழந்தைகளுக்குமேல் வைத்திருப்பவர்களின் ஓட்டுரிமையைப் பறிக்க வேண்டும்!' - பாபா ராம்தேவ்

‘100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக்கொண்ட இந்தியாவில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று’ என யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது ‘இரண்டு குழந்தைகளுக்குமேல் பெற்றுக்கொள்ளும் தம்பியினரின் ஓட்டுரிமையை அரசு பறிக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார். 

பாபா ராம்தேவ்

“நாட்டின் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த இரண்டு குழந்தைகளுக்குமேல் பெற்றுக்கொண்ட தம்பதியினருக்கு, ஓட்டுரிமை, வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்காமல் இருப்பது, மருத்துவ வசதி அளிக்காமல் இருப்பது போன்ற அடிப்படை உரிமைகளைப் பறிக்க வேண்டும். அது முஸ்லிமாக இருந்தாலும் சரி இந்துவாக இருந்தாலும் சரி. அப்படிச் செய்தால்தான் நாட்டின் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்” என்று பேசியுள்ளார்.

ராம்தேவ் இப்படியான கருத்துகளைச் சொல்வது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டு “இரண்டு குழந்தைகளுக்குமேல் பெற்றுக் கொண்டவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் இடமோ அரசு மருத்துவமனைகள் மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமையோ தரக் கூடாது” என்றும் சொல்லியிருந்தார்.

52 வயதான இவர் தன்னைப்போலத் திருமணம் செய்யாமல் இருப்பவர்களை இந்த அரசு கௌரவப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். “நான் எப்போதும் என்னைச் சுற்றிக் கூட்டத்தை வைத்துக்கொண்டிருப்பதில்லை. நான் ஒரு தனித்த ஆளுமையாகவே இருக்கின்றேன். என்னைப்போல ஆயிரம் தனித்த ஆளுமைகளை உருவாக்கி இந்தியாவின் பொருளாதாரத்தை 2050-க்குள் மேம்படச் செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம்” என்றும் பேசியுள்ளார்.

பாபா ராம்தேவ்

இவரது பதஞ்சலி நிறுவனம் 1997-ல் தொடங்கப்பட்டது. இருபதுக்கும் மேற்பட்ட பொருள்களை உற்பத்தி செய்யும் இந்த நிறுவனம் பதப்படுத்தப்பட்ட உணவு, பால் பொருள்கள், தண்ணீர் மற்றும் துணி வகைகள் போன்றவற்றைத் தயாரிக்கிறது. 

உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேதப் பொருள்கள் தயாரிப்பில் அதிக அளவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உயிர்ப் பொருள்களை பதஞ்சலி நிறுவனம் பயன்படுத்துவதால் அந்த நிறுவனம் சார்பாக ஆண்டு வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை அங்கிருக்கும் விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.