வங்கி மோசடி - ஐ.சி.ஐ.சி.ஐ முன்னாள் தலைவர் சந்தா கோச்சார் மீது சி.பி.ஐ வழக்கு! | Videocon case: CBI files case against Chanda Kochhar

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (24/01/2019)

கடைசி தொடர்பு:19:30 (24/01/2019)

வங்கி மோசடி - ஐ.சி.ஐ.சி.ஐ முன்னாள் தலைவர் சந்தா கோச்சார் மீது சி.பி.ஐ வழக்கு!

வீடியோகான் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட கடனில் ரூ.2,800 கோடிக்கு மேல் கடன் திருப்பிச் செலுத்தப்படாததால் வாராக்கடனாக அறிவிக்கப்பட்டது. மேலும், சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரின் நிறுவனத்தில் வீடியோகான் நிறுவனம் முதலீடு செய்திருந்தது தெரியவந்தது. எனவே, இந்த வாராக்கடன் மோசடியில் இவரின் கணவருக்கும் தொடர்புள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டது. 

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில், வாராக்கடன் மோசடிக்காக முன்னாள் தலைவர் சந்தா கோச்சார் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. அவரின் கணவர் தீபக் கோச்சார் மற்றும் வீடியோகான் குழுமத்தின் தலைவர் வேணுகோபால் தூத் மீதும் வங்கி மோசடிக்காக சி.பி.ஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

சந்தா கோச்சார்

முன்னதாக, கடந்த 2012-ம் ஆண்டு, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைவராக சந்தா கோச்சார் பணியாற்றியபோது வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.3,250 கோடி ரூபாய் கடன் வழங்கியதில் இவர்மீது மோசடிக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. வீடியோகான் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட கடனில் ரூ.2,800 கோடிக்கு மேல் கடன் திருப்பிச் செலுத்தப்படாததால் வாராக்கடனாக அறிவிக்கப்பட்டது. மேலும், சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரின் நிறுவனத்தில் வீடியோகான் நிறுவனம் முதலீடு செய்திருந்தது தெரியவந்தது. எனவே, இந்த வாராக்கடன் மோசடியில் இவரின் கணவருக்கும் தொடர்புள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டது. 

அதையடுத்து, இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ விசாரணையில் இறங்கியது. இன்னொருபக்கம் வங்கியின் சார்பாகவும் ஒரு விசாரணைக்குழு அமைத்து சந்தா கோச்சாரிடம் விசாரிக்க முடிவெடுக்கப்பட்டது. அவர்மீது விசாரணை நடைபெறவுள்ளதால் வங்கியின் நிர்வாகக்குழு கேட்டுக்கொண்டதற்கிணங்க தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்போது சி.பி.ஐ விசாரணையில் இவர், இவரது கணவர் தீபக் கோச்சார் மற்றும் வீடியோகான் தலைவர் வேணுகோபால் தூத் மூவரும் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்ததால் இவர்கள்மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் மும்பை, அவுரங்காபாத் உள்ளிட்ட 4 இடங்களில் சந்தா கோச்சார் கணவரின் அலுவலகம், வீடியோகான் நிறுவனங்களிலும் சி.பி.ஐ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்திவருகின்றனர்.