``50% இட ஒதுக்கீட்டை தகர்க்கப்பார்க்கிறது மத்திய அரசு” -தேஜஸ்வி விளாசல் | Tejashwi slams centre govt for 10% quota to upper castes

வெளியிடப்பட்ட நேரம்: 07:50 (25/01/2019)

கடைசி தொடர்பு:07:50 (25/01/2019)

``50% இட ஒதுக்கீட்டை தகர்க்கப்பார்க்கிறது மத்திய அரசு” -தேஜஸ்வி விளாசல்

``எந்தத் தரப்பும் கோரிக்கை விடுக்காமல், எந்த ஆணையமும் பரிந்துரைக்காமல் பொதுப்பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளித்தது ஏன்?” என்று, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், மத்திய அரசை விளாசியுள்ளார். 

தேஜஸ்வி

பொதுப்பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. பிப்ரவரி மாதம் முதல், நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது அந்தச் சட்டம். இதை எதிர்த்து தி.மு.க தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ``4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும்'' என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில், பாட்னாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், ``பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளித்திருக்கிறது மத்திய அரசு. இதன் மூலம், ஏற்கெனவே அமலில் இருக்கும் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவருக்கான 50 சதவிகித இட ஒதுக்கீட்டை தகர்க்கப் பார்க்கிறார்கள்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். 

மோடி

தொடர்ந்து பேசியவர், ``எனக்குப் புரியவில்லை. எந்தத் தரப்பும் கோரிக்கை விடுக்கவில்லை, எந்த ஆணையமும் பரிந்துரைக்கவில்லை. ஆனாலும், பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளித்திருக்கிறார்கள். அவசர அவசரமாக அரசியலமைப்பைத் திருத்தி அதைச் செய்திருக்கிறார்கள். இது எப்படிச் சரி?” என்று கேள்வி எழுப்பினார். ``பொதுப் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளித்தவர்கள், இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 27 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதமாக உயர்த்தவும், பட்டியலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், தேஜஸ்வி வலியுறுத்தியுள்ளார்.