`இந்த 5 பேரில் ஒருவர் தான் அடுத்த சி.பி.ஐ இயக்குநரா?’- மோடி யாரை ‘டிக்’ செய்யப்போகிறார் | High panel will decide soon, Who is next cbi director?

வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (25/01/2019)

கடைசி தொடர்பு:09:40 (25/01/2019)

`இந்த 5 பேரில் ஒருவர் தான் அடுத்த சி.பி.ஐ இயக்குநரா?’- மோடி யாரை ‘டிக்’ செய்யப்போகிறார்

சி.பி.ஐ அமைப்பில் கடந்த சில மாதங்களாக கண்ணாமூச்சி ஆட்டம் நடந்து வருகிறது. அதன் முன்னாள் இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டுகள், அதற்கடுத்து அவர் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டது, மீண்டும் திரும்ப வழங்கப்பட்ட பதவியை அவர் மறுத்தது என, சி.பி.ஐ அமைப்பு தொடர்ந்து சிக்கலில் சிக்கி வருகிறது. போதாக்குறைக்கு, ``மத்திய அரசு சொல்வதைச் செய்யும் கிளிப்பிள்ளையாக மாறிவிட்டது சி.பி.ஐ” என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களும், அந்த அமைப்பின் நம்பகத்தன்மையை அசைத்துப் பார்த்து வருகிறது. சி.பி.ஐ அமைப்பின் தற்காலிக இயக்குநராக நாகேஸ்வர ராவ் நீடிக்கிறார். அந்த நியமனத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது. அது, அடுத்தவெடியை போடப்போகிறது.

அலோக் வர்மா

சி.பி.ஐ இயக்குநர் பதவியிலிருந்து அலோக் வர்மா விலகி இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அந்த அமைப்பின் அடுத்த இயக்குநர் யார் என்பதை முடிவு செய்வதில், தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது. சி.பி.ஐ தன்னாட்சி அமைப்பு என்பதால், அதன் இயக்குநர் பதவிக்கு உரிய நபரை பிரதமர் தலைமையிலான உயர்மட்டக்குழுவே தேர்ந்தெடுத்து நியமிக்கும். பிரதமரைத் தவிர்த்து, மக்களவை எதிர்க்கட்சித்தலைவரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் அந்தக்குழுவில் இருப்பார்கள். 

பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில் நடந்த கலந்தாலோசனைக் கூட்டம், முடிவு எட்டப்படாமல் முடிந்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்த பெயர்களை, எதிர்க்கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயும் ஏற்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. அதனால், இன்னொரு கலந்தாலோசனைக்கூட்டம் நடக்க இருக்கிறது. 

கூட்டத்துக்குப் பிறகு பேசிய மல்லிகார்ஜூன கார்கே, ``எங்கள் முன்னால் சமர்ப்பிக்கப்பட்டவர்களைப் பற்றிய, சிறிய அறிமுகம் மட்டுமே இருந்தது. அவர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்களின் பின்புலம் என்ன, இதுவரை எந்த மாதிரியான பணிகளைச் செய்திருக்கிறார்கள் போன்ற தகவல்கள் எங்களுக்கு முழுமையாக அளிக்கப்படவில்லை. இப்படியிருக்கும்போது, அதன் மீது உடனடி முடிவு எடுப்பது சரியாக இருக்காது, அதனால், நாங்கள் மேலதிக தகவல்களை அளிக்கச்சொல்லி கோரியிருக்கிறோம். அடுத்தக்கூட்டத்தை விரைவில் கூட்டுமாறு கேட்டிருக்கிறோம்” என்றார். இன்னும் இரண்டு வாரத்துக்குள் அடுத்தக்கூட்டத்தை மோடி கூட்ட இருக்கிறார்.

மோடி

அடுத்த சி.பி.ஐ இயக்குநர் பதவிக்கு சிலரின் பெயர் அடிபடுகிறது. அவர்களின் விவரங்கள் அப்படியே கீழே...

1. ஷிவானந்த் ஜா... குஜராத்தின் டி.ஜி.பி-யாக இருப்பவர் இவர். அதுவும் இல்லாமல், மோடிக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் நெருக்கமானவரும் கூட. அவர் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, ஷிவானந்த் ஜாவை அகமதாபாத் காவல் ஆணையராக நியமித்து அழகு பார்த்தார். ஒருவேளை, ஜா சி.பி.ஐ இயக்குநராக நியமிக்கப்பட்டால், குஜராத் டி.ஜி.பி இடத்துக்கு, சி.பி.ஐ அமைப்பில் முக்கியப் பொறுப்பில் இருந்த ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. சி.பி.ஐ அமைப்பின் சமீபகால சர்ச்சைகளை ஆரம்பித்து வைத்தாரே, அதே ராகேஷ் அஸ்தானா தான். 

2. ரஜினிகாந்த் மிஷ்ரா... எல்லைப்பாதுகாப்புப் படை இயக்குநராக இருக்கும் இவருக்கும், சி.பி.ஐ இயக்குநர் பொறுப்பு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால், பிரதமர் மோடியின் கொள்கைச்செயலாளர் நிபேந்தர் மிஸ்ராவுக்கு நெருக்கமானவராம், இந்த ரஜினிகாந்த் மிஷ்ரா. அதனால், அவருக்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம் என்கிறார்கள்.

3. ராஜேஷ் ரஞ்சன்... இந்தியாவின் விமான நிலையங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் படைக்கு, இவர்தான் இப்போது பாஸ். அதாவது, மத்திய தொழிற்பாதுகாப்பு படை இயக்குநராக இருக்கிறார். இதற்கு முன்னால், இன்டர்போல் லெவலுக்கு இறங்கியடித்த அனுபவம் கொண்டவர். சி.பி.ஐ அமைப்பிலும் சிலகாலம் பங்கு வகித்திருக்கிறார். அதனால், இவருக்கும் சி.பி.ஐ இயக்குநர் பதவிக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

4. ஒய்.சி. மோடி... புகழ்பெற்ற தேசிய புலனாய்வுப் பிரிவின் இயக்குநராக பொறுப்பு வகிக்கிறார். இதற்கு முன்னாள் சி.பி.ஐ அமைப்பில் பணிபுரிந்த அனுபவமும் இவருக்கு இருப்பதால், இந்த மோடியை அந்த மோடி டிக்கடிப்பார் என்கிறார்கள். அதோடு, ‘ஆர் எஸ் எஸ் தொடர்பு கொண்டவர்’ என்ற விமர்சனமும் இவர் மீது இருக்கிறது. குஜராத் கலவரங்களை விசாரிக்க மோடி அமைத்த விசாரணைக்குழுவில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது,

5. சுபோத் ஜெய்ஸ்வால்... தற்போது, மும்பை காவல் ஆணையராக பொறுப்பு வகிக்கிறார், இவர். சுபோத் அந்தப்பதவிக்கு நியமிக்கப்பட்டதே சுவாரஸ்யமானது. ரா அமைப்பில் கலக்கிக் கொண்டிருந்தவரை, ``நீங்கள் மும்பைக்கு வந்தே ஆக வேண்டும்” என்று அடம்பிடித்து அழைத்து வந்தது மகாராஷ்டிர அரசு. அந்த அளவுக்கு அதிரடிக்கு பெயர் போனவர். அதே நேரம், இவர் மீதும் ’ஆர்.எஸ்.எஸ் பாசம் கொண்டவர்’ என்ற விமர்சனம் இருக்கிறது. 

இந்தப் பட்டியலில், முதலில் இருக்கும் ஷிவானந்த் ஜா மிக முக்கியமானவர். இருப்பதிலேயே சீனியர் என்பதால், பிரதமர் இவரை தேர்ந்தெடுப்பார், மல்லிகார்ஜூன கார்கேவும், ரஞ்சன் கோகாயும் இவர் பெயருக்கு தலையசைப்பார்கள் என்று சொல்கிறார்கள். அப்படி நடந்தால், அடுத்த சில வருடங்களுக்கு அரசியல்வாதிகளை அலறவிடும் இடத்தில், ஷிவானந்த் ஜா இருப்பார்.