போர் விமானங்கள்... முந்தும் சீனா... நெருங்கும் பாகிஸ்தான்... தவிக்கும் இந்தியா! | Are we in shortage of advanced fighter planes?

வெளியிடப்பட்ட நேரம்: 14:57 (25/01/2019)

கடைசி தொடர்பு:14:57 (25/01/2019)

போர் விமானங்கள்... முந்தும் சீனா... நெருங்கும் பாகிஸ்தான்... தவிக்கும் இந்தியா!

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், ஒருவேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதனால் விமானங்கள் கிடைப்பதில் தாமதமானால் நிலைமை மேலும் சிக்கல்தான். 

ன்னும் இரண்டு ஆண்டுகளில், இந்திய விமானப் படைக்குத் தேவைப்படும் போர் விமானங்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை ஏற்படும் நிலைமை உருவாகும். அதே சமயம், போர் விமானங்களின் எண்ணிக்கையில் இந்தியாவைக் காட்டிலும் அதிக பலத்துடன் சீனாவும், சம பலத்துடன் பாகிஸ்தானும் இருக்கும் என்பது இந்திய விமானப்படை வட்டாரத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

போர் விமானங்கள்

இந்திய விமானப்படை, பெரும்பாலும் `மிக்’ மற்றும் `சுகோய்’ போன்ற ரஷ்ய போர் விமானங்களையே அதிகம் சார்ந்துள்ளது. கடைசியாக, கடந்த 1996-ம் ஆண்டு, ரஷ்யாவிலிருந்து 30 சுகோய் விமானங்களை இந்தியா வாங்கியது. அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானிடம் மேம்பட்ட விமானங்கள் இருக்கும் நிலையில், ராணுவ சமநிலையைப் பராமரிக்க, மேம்படுத்தப்பட்ட போர் விமானங்களை இந்தியா வைத்திருப்பது அவசியமானது.

இந்த நிலையில், இந்தியப் படை பலம் தொடர்பான அரசு ஆவணங்களை ஆய்வு செய்ததில், இந்திய விமானப் படையிடம் தற்போது 30 விமானப் படையணிகள் மட்டுமே இருப்பதும், இந்த எண்ணிக்கை, வருகிற 2021-ம் ஆண்டு வாக்கில் 26 ஆகக் குறைந்துவிடும் என்றும் தெரிய வந்துள்ளது. 

இருமுனைகளிலும் போர் புரிய இந்தியாவுக்கு ஸ்க்வாட்ரன்கள் (squadrons) எனப்படும் விமானப் படையணிகள் குறைந்தபட்சம் 42 தேவை. ஒரு படையணியில் 12 முதல் 24 விமானங்கள் இருக்கும். மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான விமானங்கள் பழையதாகிவிட்டதாகக் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம், நாடாளுமன்றக் குழுவிடம் இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது.
 
இந்திய விமானப்படையிடம் தற்போதுள்ள பழைய சோவியத் ரஷ்யா காலத்தில் வாங்கப்பட்ட 6 படையணிகளின் `மிக்’ ரக போர் விமானங்கள், 2021-ம் ஆண்டு வாக்கில், பயன்படுத்த உகந்ததல்ல என்ற நிலைக்குச் சென்றுவிடும் என்பதால், அவை விமானப் படையிலிருந்து நீக்கப்பட்டு விடும். அதற்குப் பதிலாக பிரான்ஸ் ரஃபேல் போர் விமானங்களைக் கொண்ட ஒரே ஒரு படையணியும், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவன (ஹெச்.ஏ.எல்) தயாரிப்பான `எல்சிஏ தேஜாஸ்’ ரக போர் விமானங்களைக் கொண்ட ஒரு படையணி மட்டுமே சேர்க்கப்படும். 

போர் விமானங்கள்

2027-ம் ஆண்டில் இந்திய விமானப் படையணிகள் எண்ணிக்கையை 30 ஆக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 4 படையணி விமானங்கள் எல்சிஏ தேஜாஸ் ரக விமானங்களாக இருக்கும். அதே சமயம் இது தொடர்பாக இந்திய விமானப் படைக்கும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கும் இடையே செய்துகொள்ளப்பட வேண்டிய ஒப்பந்தம் இன்னும் கையெழுத்திடப்படாமலேயே இருக்கிறது. 

மேற்கூறிய ஆவணங்களின்படி, காலாவதியாகும் விமானங்களை விமானப்படையிலிருந்து நீக்கிவிட்டால், 2037-ம் ஆண்டு வாக்கில் இந்தியப் படையணி விமானங்களின் எண்ணிக்கை 21 ஆகவும், 2042-ம் ஆண்டு வாக்கில் 19 ஆகவும் குறைந்துவிடும். இந்தப் பற்றாக்குறையைச் சமாளிக்கத்தான் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து எல்சிஏ தேஜாஸ் மார்க் 1 மற்றும் மார்க் 2 ஆகிய ரகங்களைச் சேர்ந்த 18 படையணிக்கான விமானங்களையும், 6 படையணிக்கான வெளிநாட்டுப் போர் விமானங்களையும் வாங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வெளிநாட்டுப் போர் விமானங்களை வாங்குவதற்கான ஆரம்பகட்ட விசாரணை நடவடிக்கை, கடந்த ஆண்டு தொடங்கியது. 

இந்திய விமானப் படை, 2002-ம் ஆண்டில்தான் அப்போதைக்குத் தனக்குத் தேவையான 42 படையணி விமானங்களின் எண்ணிக்கையையும் முழு அளவில் கொண்டிருந்தது. ஆனால், கார்கில் போருக்குப் பின்னர், பல்நோக்குத் தாக்குதல் திறன்கொண்ட நடுத்தர ரக விமானங்களைக் கொண்ட 7 படையணி தேவை என்று இந்திய விமானப்படை அப்போது கோரியது. 

இந்த நிலையில்தான், 2007-ம் ஆண்டில் மத்தியில் அப்போது ஆட்சியிலிருந்த பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான நடைமுறை தொடங்கியது. இறுதியாக 2012-ம் ஆண்டில் இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் நிறுவனத்திடமிருந்து 18 விமானங்களைப் பறக்கும் நிலையில் வாங்கவும், 108 விமானங்களை டஸால்ட் நிறுவனத்தின் உதவியுடன் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஹெச்.ஏ.எல்-ல் தயாரிப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தை முடிவடையவில்லை. பின்னர், ஆட்சிக்கு வந்த பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், 2015-ம் ஆண்டில் பிரான்ஸிடமிருந்து 36 ரஃபேல் விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

போர் விமானங்கள்

அந்த ஒப்பந்தத்தில் பறக்கும் நிலையில் இருக்கும் 36 விமானங்களை 58,000 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், அதே ஆண்டு டிசம்பர் மாதம் இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டை எழுப்பியது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் போது ஒரு விமானத்தை 570 கோடி ரூபாய் வாங்குவதற்குப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு 1,670 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளதாகக் குற்றம்சாட்டிய காங்கிரஸ், ஹெச்.ஏ.எல் நிறுவனத்தைப் புறக்கணித்துவிட்டு விமான உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்கான 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் முன் அனுபவம் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் சர்ச்சையைக் கிளப்பியது. 

இந்த நிலையில், விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், ஒருவேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதனால் விமானங்கள் கிடைப்பதில் தாமதமானால் நிலைமை மேலும் சிக்கல்தான். 

முன்னர் வெளியான ஒரு சர்வதேச அறிக்கையின்படி, பாகிஸ்தான் மற்றும் சீனாவிடம் 750 மேம்படுத்தப்பட்ட பல்நோக்குத் தாக்குதல் திறன் கொண்ட போர் விமானங்கள் உள்ளதாகவும், அதே சமயம் இந்தியாவிடம் அத்தகைய திறன் வாய்ந்த 450 விமானங்கள் மட்டுமே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. படையணி கணக்கின்படி, வரும் 2021-ம் ஆண்டு வாக்கில் 26 ஆகக் குறைந்துவிடும். அதே சமயம் பாகிஸ்தான், ஏறக்குறைய இந்தியாவுக்குச் சமமாக 25 விமானப் படையணிகளுடனும், சீனா 42 விமானப் படையணிகளுடனும் இருக்கும். இது இந்திய விமானப் படைக்குக் கவலை அளிக்கும் விஷயமாக மாறி உள்ளது. 

இந்த நிலையில், ரஃபேல் விமானங்களையோ அல்லது வேறு ஏதோ விமானங்களையோ வாங்கி, தனது படையணி பலத்தை விரைவில் அதிகரித்துக்கொள்ளும் கட்டாயத் தேவை இந்திய விமானப் படைக்கு ஏற்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்