51 பெண்கள் இல்லை 17 பேர்தான்! - சபரிமலை அறிக்கையைத் திருத்திய கேரள அரசு | Kerala Govt Revises Sabarimala List

வெளியிடப்பட்ட நேரம்: 14:19 (25/01/2019)

கடைசி தொடர்பு:14:19 (25/01/2019)

51 பெண்கள் இல்லை 17 பேர்தான்! - சபரிமலை அறிக்கையைத் திருத்திய கேரள அரசு

கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு கேரளா, ஆந்திரா, தமிழகம் போன்ற பல மாநிலத்தைச் சேர்ந்த பல பெண்கள் சபரிமலை செல்ல முயன்றனர். ஐம்பது வயதுக்கும் குறைவாக உள்ள பெண்கள் சபரிமலைக்குச் செல்வது கோயிலுக்கு வெளியில் உள்ள பக்தர்கள் அவர்களைத் தடுப்பதும் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது.

சபரிமலை

ஆனால், கடந்த 2-ம் தேதி கேரளாவைச் சேர்ந்த பிந்து மற்றும் கனகதுர்கா ஆகிய இரண்டு பெண்களும் போலீஸ் பாதுகாப்புடன் மிகவும் ரகசியமாக சபரிமலை கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். இந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் விவாதமாக மாறியது. இரு பெண்கள் சபரிமலைக்குச் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பல இடங்களில் பல இந்து அமைப்புகளும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளும் போராட்டம் நடத்தின. மேலும், சபரிமலைக்குச் சென்ற இரு பெண்களுக்கும் பல மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.

பிந்து - கனக துர்கா

தங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என இரு பெண்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை பிந்து மற்றும் கனக துர்கா ஆகிய இருவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேரள போலீஸாருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணையின், சபரிமலை நடை திறக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் குறைந்த வயதுள்ள பெண்கள் எத்தனை பேர் கோயிலுக்குள் சென்றனர் என்ற விவரங்களைக் கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 

சபரிமலை போராட்டம்

அந்த அறிக்கையில் மொத்தமாக 51 பெண்கள் சென்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது. பிறகு நடந்த விசாரணையில் கேரள அரசு தாக்கல் செய்த அறிக்கையில் ஐம்பது வயதுக்கும் அதிகமாக உள்ள பல பெண்களின் பெயர்களும் சில ஆண்களின் பெயர்களும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அந்த அறிக்கை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகக் கேரள தலைமைச் செயலர் தாம் ஜோஸ் தெரிவித்துள்ளார். திருத்தப்பட்ட அறிக்கையின்படி ஐம்பது வயதுக்கும் குறைவான வயதுள்ள 17 பெண்கள் மட்டுமே சபரிமலைக்கு சென்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பழைய அறிக்கையிலிருந்து 34 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.