சபரிமலை கருத்தால் சர்ச்சை! - தேசிய விருதுபெற்ற இயக்குநர் மீது மாட்டுச் சாணம் வீச்சு | Cow dung poured on award winning filmmaker Priyanandanan

வெளியிடப்பட்ட நேரம்: 18:57 (25/01/2019)

கடைசி தொடர்பு:18:57 (25/01/2019)

சபரிமலை கருத்தால் சர்ச்சை! - தேசிய விருதுபெற்ற இயக்குநர் மீது மாட்டுச் சாணம் வீச்சு

கேரளாவில்,தேசிய விருதுபெற்ற சினிமா இயக்குநர் பிரியானந்தன் மீது மாட்டுச் சாணம் வீசிய இந்து அமைப்பைச் சேர்ந்த  தொண்டர்களை போலீஸார் தேடிவருகின்றனர். 

இயக்குநர் பிரியானந்தன்

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சி மற்றும்  இந்து அமைப்புகளுக்கு எதிராக ஃபேஸ்புக் பக்கத்தில் பிரியானந்தன் தன் கருத்தைப் பதிவுசெய்திருந்தார். எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, தன் கருத்தை வாபஸ் பெற்றார். எனினும், மன்னிப்பு கோரவில்லை.

இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து அவருக்கு மிரட்டல் விடுத்துவந்தனர். இந்நிலையில், திருச்சூர் அருகே உள்ள வல்லச்சராவில், இன்று காலை கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பிரியானந்தனை சிலர் தாக்கினர். பின்னர், மாட்டுச் சாணத்தை அவரின் முகத்தில் வீசிவிட்டு ஒடிவிட்டனர். இந்து அமைப்புகளின் தொண்டர்கள்தான் பிரியானந்தன் மீது சாணி வீசி இருக்க வேண்டுமென்ற கோணத்தில் போலீஸார் விசாரித்துவருகின்றனர். அருகிலிருந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின்  பிரியானந்தன்  வீடு திரும்பினார். 

கடந்த 2006-ம் ஆண்டு பிரியானந்தன் இயக்கிய 'புலிஜென்மம்' என்ற மலையாளப் படம் தேசிய விருது பெற்றது. 2001-ம் ஆண்டு, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஈ.எம். எஸ். நம்பூதிபாட் வாழ்க்கையை முன்வைத்து இவர் எடுத்த 'நெய்யாத்துகாரன்' என்ற  படத்தில் நடித்த முரளிக்கு, சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்தது. 

கேரள முதல்வர் பினராயி விஜயன், பிரியானந்தன் மீதான தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சங்க பரிவார் அமைப்புகளின் சகிப்புத்தன்மை இல்லாத குணத்தை இந்தத் தாக்குதல் காட்டுவதாக, பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க