70 ஆண்டுகளில் இல்லாமல் இந்த குடியரசு தின அணிவகுப்பில் புதுமை என்ன? #VikatanInfographics | Many specialties in this year India's 70th republic day parade

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (26/01/2019)

கடைசி தொடர்பு:10:00 (26/01/2019)

70 ஆண்டுகளில் இல்லாமல் இந்த குடியரசு தின அணிவகுப்பில் புதுமை என்ன? #VikatanInfographics

முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்தமுறை குடியரசு தின விழா அணிவகுப்பில் பல புதுமையான நிகழ்வுகள் இடம்பெறுவது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

70 ஆண்டுகளில் இல்லாமல் இந்த குடியரசு தின அணிவகுப்பில் புதுமை என்ன? #VikatanInfographics

நாட்டின் 70-வது குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

'உலகின் மாபெரும் ஜனநாயக நாடு' என்ற பெருமை கொண்டது இந்தியா. 200 ஆண்டுகளுக்கும் மேல் வெள்ளையர்களின் பிடியில் இருந்த இந்தியா 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் சுதந்திரம் அடைந்தது. 

சுதந்திர இந்தியாவின் அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் நியமிக்கப்பட்டார். பின்னாளில் அவரே இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதன் பின்னர், இந்திய அரசியலமைப்புக்கான வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசனம் எழுதப்பட்டது. 

மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த அரசியல் சாசனம் இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரே, தேசப்பிதா அண்ணல் காந்தியடிகள் 1930-ம் ஆண்டு ஜனவரி 26-ம் நாளை, அனைவரும் சுதந்திர தினமாகக் கொண்டாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். காந்தியடிகளின் அந்தக் கூற்றை நினைவுகூரும்வகையில், 1950-ம் ஆண்டு முதல் ஜனவரி 26-ம் நாள், இந்தியாவில் குடியரசுத் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவர்ஹலால் நேரு, தலைநகர் டெல்லியில் மூவர்ணக் கொடியை ஏற்றி, முதலாவது குடியரசு தினக் கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்தார். அன்றைய தினத்தில் புதுதில்லியில் குடியரசுத் தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து, அனைத்து மாநிலங்களின் சார்பிலும் அந்தந்த மாநிலங்களின் பாரம்பர்ய கலைகளுடன் கூடிய, அலங்கார ஊர்திகள் அணிவகுப்பும் இடம்பெற்றது. இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து வந்த ஒவ்வொரு குடியரசு தின விழாவிலும், தில்லியில் ஆண்டுதோறும் குடியரசுத் தலைவர் தேசியக் கொடியை ஏற்றிவைப்பது மரபு.

இந்த விழாவில் முப்படைகளின் வீர, தீர பராக்கிரமங்களை நிலைநிறுத்தும் வகையிலும், ராணுவத்தினரின் வீரத்தை பறைசாற்றும் வகையிலும் பல்வேறு சாகசங்களும் அணிவகுப்பில் இடம்பெறும். 

 

70ஆம் ஆண்டு குடியரசு தின விழா

அதன்படி, இந்த ஆண்டு 70-வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது.  தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தில்லியில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, உரையாற்றுவதுடன், முப்படைகளின் அணிவகுப்பையும் பார்வையிட உள்ளார். அதன்படி இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக, தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராம்போசா புதுதில்லி வந்துள்ளார். 1965-ம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகள் யாரும் இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டங்களில் பங்கேற்பதில்லை.

வேறு எந்த ஆண்டு குடியரசு தின விழாவிற்கும் இல்லாதச் சிறப்பாக, நேதாஜியால் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய நான்கு வீரர்கள் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கிறார்கள். லலித் ராம், ஹிரா சிங், பாக்மால், பரமானந்த யாதவ் ஆகியோர்தான் அவர்கள். 95 முதல் 100 வயதை எட்டியவர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பது இதுவே முதல் முறை. 

முதல் முறையாக ராணுவ அணிவகுப்பில் நான்கு அணிகளுக்கு ராணுவத்தில் உள்ள மகளிர் தலைமை தாங்குகின்றனர். 

முதன் முறையாக இந்தியாவின் மிகப் பழைமையான ராணுவப் படையின்  அஸ்ஸாம் ரைபிள் பெண் ராணுவ பிரிவினர் அணிவகுப்பில் பங்கேற்கின்றனர். டெர் டெவில்ஸ் பைக் சாகச அணியில் பெண் ஒருவர் முதல்முறையாக  இடம் பிடித்துள்ளார். 

முதன்முறையாக கூர்கா பிரிவினரும் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கிறார்கள்.

அணிவகுப்பின் போது சங்கு ஒலி மூலம் இசை வைத்தியம் முதல் முறையாக  இடம்பெறுகிறது.

சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து பெறப்பட்ட M-777 Howitzer வகை பீரங்கிகளும் அணிவகுப்பில் இடம்பெறுகின்றன. 

கே-9 வஜ்ரா பீரங்கியும் இந்த முறை புதிதாக அணிவகுப்பில் இடம்பெறுகிறது. இது மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் எல் அண்ட் டி நிறுவனத்தினரால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் T-90 பீரங்கிகள், SU-30, Mig 29, ஜாக்குவார் விமானங்களும் இடம்பெறுகின்றன. 

மேம்படுத்தப்பட்ட போர் விமானங்கள் உள்பட 18 போர் விமானங்களும், மிக்-29 ரக விமானங்களும் சாகசங்களில் பங்கேற்கின்றன. இதில் மூன்று விமானங்கள் உயிரி எரிபொருள் உதவியுடன் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. எட்டு டிரான்ஸ்போர்ட்டர் விமானங்களும், சில ராணுவ ஹெலிகாப்டர்களும் விமான சாகசத்தில் பங்கேற்கின்றன. 

காந்தியடிகளின் 150-வது பிறந்தநாளை கருப்பொருளாகக் கொண்டு பல்வேறு மாநிலங்களின் 22 அலங்கார ஊர்திகள் இடம்பெறுகின்றன. இதில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் அலங்கார ஊர்தி இடம் பெறுகிறது. கேரள மாநிலத்தின் அலங்கார ஊர்தி சில காரணங்களால் இந்தாண்டு இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியா கேட் அருகில் 40 ஏக்கர் பரப்பளவில் 176 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தேசிய போர் நினைவகத்தைப் பிரதமர் திறந்து வைக்கிறார். இதுவரை 120-க்கும் மேற்பட்ட போர் நினைவுச் சின்னம் ஆயுதப் படையினரால் பராமரிக்கப்பட்டாலும், தேசிய அளவில் போர் நினைவகம் கட்டப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. இந்த நினைவகம், சுதந்திர தினத்தன்றே திறக்கப்பட வேண்டியது. பணிகள் நிறைவடையாததால் குடியரசுத் தினத்தன்று திறக்கப்பட உள்ளது.  

முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்தமுறை குடியரசு தின விழா அணிவகுப்பில் பல புதுமையான நிகழ்வுகள் இடம்பெறுவது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 

நாடு சுதந்திரம் அடைந்ததன் பின்னணியில் லட்சக்கணக்கானோரின் குருதியும், பல்லாயிரக்கணக்கான தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது. 130 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் 'நாம் அனைவரும் இந்தியர்கள்' என்பதில் ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்கிறோம். 

பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம். இந்தியர்கள் என்பதை மார்தட்டிச் சொல்வோம் உலகுக்கு...


டிரெண்டிங் @ விகடன்