`மோடியை எப்போதும் வெறுக்க மாட்டேன்!’ - ராகுல் காந்தி ஒடிசாவில் பேச்சு | RSS wants to control all institutions in country rahul gandhi says

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (26/01/2019)

கடைசி தொடர்பு:17:32 (26/01/2019)

`மோடியை எப்போதும் வெறுக்க மாட்டேன்!’ - ராகுல் காந்தி ஒடிசாவில் பேச்சு

இந்தியாவில் உள்ள தேசியக் கட்சிகள் முதல் மாநிலக் கட்சிகள் வரை அனைவரும், வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காகத் தயாராகி வருகின்றனர். இதையொட்டி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஒடிசா மாநிலம் புவனேஷ்வர் சென்றுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. 

நேற்று அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “நம் நாட்டில் ஆர்.எஸ்.எஸ் என்ற ஓர் இயக்கம் உள்ளது. அது பா.ஜ.க-வின் தாய் அமைப்பு. நாட்டில் இருக்கும் ஒரே இயக்கம் தாங்கள் மட்டுமே என அவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி  அரசின் அனைத்து தளங்களிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சுவடுகளைக் காண முடிகிறது. அவர்கள் அனைத்து துறைகளிலும் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். 

மொத்தமுள்ள 120 கோடி மக்கள் இந்தியாவை ஆள வேண்டும் என நாங்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளோம். ஒரே ஒரு தனி அமைப்பால் இந்த நாடு ஆளப்படக் கூடாது. ஒரு நடுத்தர குடும்பத்தினர் லட்சக்கணக்கில் செலவு செய்தும் தரமான கல்வியைப் பெற முடியவில்லை. மருத்துவத் துறையிலும் இதே நிலையே நீடித்து வருகிறது. நாங்கள் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருப்போம். மக்களின் கருத்துகளை கேட்போம். பிரதமர் மோடியைப்போல், தனக்கு மட்டும்தான் அனைத்தும் தெரியும் என இருக்க மாட்டோம். 

ஓர் அரசியல்வாதியாக, ஒரு மனிதனாக இழிவுபடுத்தப்படுதல்தான் பா.ஜ.க-வினரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் எனக்குக் கொடுத்த பரிசு. அவர்களால் இதைத்தான் மிகச் சிறந்த பரிசாக எனக்கு அளிக்க முடிந்தது. பிரதமர் மோடி என்னை இழிவுபடுத்தும்போதும் அவமானப்படுத்தும்போதும் அவர் மீது எனக்குக் கோபம் வரவில்லை; மாறாக அவரைக் கட்டியணைக்கவே தோன்றுகிறது. என்னுடைய கருத்தில் இருந்து மோடி வேறுபட்டவர் என எனக்குத் தெரியும். நான் அவருடன் கருத்து மோதலில் ஈடுபடுவேன். ஆனால், நான் அவரை வெறுக்க மாட்டேன். அவரின் கருத்தைக் கூற அவருக்கு உரிமை அளிப்பேன்” எனப் பேசியுள்ளார்.