`உங்கள் ஆளுகையின் கீழ் இல்லை!’ - சத்தீஸ்கர் நக்சல் கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிய போலீஸ் எஸ்.பி | police & District Administration Bastar hoist the national flag at the banks of Indravati River.

வெளியிடப்பட்ட நேரம்: 17:12 (26/01/2019)

கடைசி தொடர்பு:17:19 (26/01/2019)

`உங்கள் ஆளுகையின் கீழ் இல்லை!’ - சத்தீஸ்கர் நக்சல் கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிய போலீஸ் எஸ்.பி

நக்சல்கள் வாழும் பகுதிக்குள் தைரியமாகச் சென்று தேசியக்கொடியை ஏற்றிய போலீஸ் அதிகாரிகளுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

இந்திராதி ஆறு

இந்தியாவின் வட மாநிலங்களில் ஒன்றான சத்தீஸ்கரில் நக்சல்கள் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இங்குள்ள பல்வேறு மலைக்கிராமங்கள் நக்சல்கள் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. இங்கு அரசாங்கத்தினர் யார் சென்றாலும், நக்சல்களிடம் மாட்டிக்கொள்ளும் சம்பவம் அடிக்கடி நிகழும். சமீபத்தில்கூட தேர்தல் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கச் சென்ற தூர்தர்ஷன் கேமராமேன் அச்சுதானந்த சாஹீ உட்பட இரண்டு போலீஸார் நக்சல்கள் தாக்குதலில் உயிரிழந்தனர். இந்தச் செய்தி இந்தியா முழுவதும் பேசப்பட்டது. அப்படிப்பட்ட நக்சல்களுக்கு சவால்விடும் வகையில் தற்போது அம்மாநிலப் போலீஸார் செய்த சம்பவம் ஒன்று பேசு பொருளாகியுள்ளது. 

போலீஸ்

சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் மாவட்டத்தின் பல பகுதிகள் நக்சல்களின் கோட்டையாகக் கருதப்படுகிறது. பழங்குடி மக்கள் அதிகமாக வாழும் இப்பகுதியில் ஓடும் முக்கிய ஆறுதான் இந்திராவதி. இப்பகுதி பழங்குடி மக்களை மாவட்டத்தை இணைக்கும் வகையில் இந்திராதி ஆற்றில் பாலம்கட்ட வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது. ஆனால், இதற்கு முட்டுக்கட்டை போட்டுவந்தனர் நக்சல்கள். பழங்குடியின மக்களின் கோரிக்கைக்காகப் பாலம் கட்ட போராடிய அந்தப் பகுதி கிராமத்தின் தலைவரும் சமூக ஆர்வலருமான ஒருவரை நக்சல்கள் கொலை செய்தனர். இப்படி நக்சல்களின் கோட்டையாகக் கருத்தப்பட்டுவந்த இந்திராதி ஆற்றின் கரைப்பகுதிக்கு இன்று பஸ்தார் மாவட்டப் போலீஸ் எஸ்.பி பாதுகாப்புப் படைகளுடன் சென்றார். குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திராதி ஆற்றின் கரைப்பகுதியில் இந்திய தேசிய கொடி ஏற்றிவைத்தார். 

போலீஸ் எஸ்.பி

கொடியை ஏற்றிவைத்துப் பேசிய மாவட்டப் போலீஸ் எஸ்.பி, ``இந்திராதி ஆற்றில் பாலம்கட்ட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைக்காக போராடிய இந்தக் கிராமத்தின் தலைவர் ஆறு மாதங்களுக்கு முன்பு நக்சல்களால் கொலை செய்யப்பட்டார். அதனால் இதே இந்திராதி ஆற்றின் கரையில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்பதற்காக இன்று அதிகாலையே நாங்கள் இங்கு வந்துவிட்டோம். அதன்படி கொடியை ஏற்றியும்விட்டோம். இனி இந்தப் பகுதியில் உள்ள காடுகளும், மக்களும் போலீஸ் ஆட்சியின் கீழ்தான் இருப்பார்கள். நக்சல்களுக்குக் கீழ் இல்லை என்பதை இதன்மூலம் அறிவிக்கிறோம்" என்று சவால் விடுத்துள்ளார். இவரின் தைரியமான நடவடிக்கைக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க