”24 மணி நேரத்தில் அயோத்தி வழக்கை முடித்துக்காட்டுவோம்!” - யோகி ஆதித்யநாத் சவால் | Yogi adityanath says, he will finish ayothya dispute case within 24 hours

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (27/01/2019)

கடைசி தொடர்பு:07:00 (27/01/2019)

”24 மணி நேரத்தில் அயோத்தி வழக்கை முடித்துக்காட்டுவோம்!” - யோகி ஆதித்யநாத் சவால்

”அயோத்தி வழக்கை எங்களிடம் ஒப்படைத்தால், 24 மணி நேரத்தில் முடித்துக்காட்டுவோம்” என்று பேசியுள்ளார், உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.

யோகி ஆதித்யநாத்

அயோத்தியில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு என்பது குறித்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பல்வேறு நீதிபதிகளையும், பல கட்ட தள்ளிவைப்புகளையும் கண்ட அந்த வழக்கு, வரும் 29ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, விசாரணை மேற்கொள்கிறது.

உச்சநீதிமன்றம்

இந்த சூழ்நிலையில், அந்த வழக்கு விசாரணை குறித்து சூடான கருத்துக்களை பேசியிருக்கிறார், உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். ”அந்த இடத்தில் இந்துக்கோவிலை இடித்துவிட்டு பாபர் மசூதி கட்டினார்கள் என்பதை, அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பிலேயே சொல்லிவிட்டார்கள். தொல்லியல்துறை ஆய்வுகளும் அதையே சொல்கின்றன. அப்படியிருக்க, உச்சநீதிமன்றம் இன்னும் தீர்ப்பு வழங்காமல் தாமதிக்கிறது. இனிமேலும் அந்தத் தாமதம் தொடர்ந்தால், மக்கள் பொறுமையிழப்பார்கள்.  அதனால், அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும். அப்படி தீர்ப்பு வழங்க முடியாவிட்டால், வழக்கை எங்களிடம் தாருங்கள். 24 மணி நேரத்தில் முடித்துக்காட்டுகிறோம். கண்டிப்பாக 25வது மணிநேரத்தை தொடமாட்டோம் என்று உறுதியளிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

”அயோத்தி வழக்கின் எல்லாப்பிரச்சனைக்கும் காங்கிரஸ் கட்சி தான் காரணம். தீர்ப்பு வருவதை அவர்கள் விரும்பவில்லை” என்றும் கூறியுள்ளார், யோகி ஆதித்யநாத்.