வால்மார்ட், அமேசான் நிறுவனங்கள் Vs உள்ளூர் சில்லறை வர்த்தகர்கள்... வெல்வது யார்? | Walmart, Amazon Vs Retail showrooms

வெளியிடப்பட்ட நேரம்: 14:38 (27/01/2019)

கடைசி தொடர்பு:14:38 (27/01/2019)

வால்மார்ட், அமேசான் நிறுவனங்கள் Vs உள்ளூர் சில்லறை வர்த்தகர்கள்... வெல்வது யார்?

அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் செய்யப்பட்ட திருத்தங்கள் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி அமலுக்கு வரவுள்ளது. அப்படி வந்தால், ஆன்லைன் விற்பனைத்தளங்கள், பொருள்களை வாங்கி வைத்து விற்பனை செய்வதில் முழுமையாக அந்நிய முதலீடு அனுமதிக்கப்படமாட்டாது. எனவே, அமேசான், வால்மார்ட் போன்ற வெளிநாட்டு ஆன்லைன் நிறுவனங்களின் முதலீடு பெரிதும் பாதிப்புக்குள்ளாகும்.

வால்மார்ட், அமேசான் நிறுவனங்கள் Vs உள்ளூர் சில்லறை வர்த்தகர்கள்... வெல்வது யார்?

ஆன்லைன் நிறுவனங்களின் அதிரடிச் சலுகை காரணமாக அவர்களது விற்பனை அதிகரித்தது. இதனால், கடை வைத்து விற்பனை செய்யும் உள்நாட்டு சில்லறை வர்த்தகர்களின் வியாபாரம் பாதிக்கப்படுவதாக மத்திய அரசிடம் தொடர்ச்சியாக புகார் அளிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, கடந்த 2018, டிசம்பர் 26-ம் தேதி, உள்நாட்டு சில்லறை வர்த்தகர்களுக்கு ஆதரவாக அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் மத்திய அரசு சில திருத்தங்களை அறிவித்தது. இந்தத் திருத்தங்களால் அமேசான், பிளிப்கார்ட் உடன் இணைந்துள்ள வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் உருவானது. இதனால் இந்த திருத்தங்கள் குறித்து அமெரிக்கா இந்தியாவிடம் கவலை தெரிவித்திருந்தது. 

வால்மார்ட்

அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் செய்யப்பட்ட திருத்தங்கள் வரும் பிப்ரவரி முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரவுள்ளது. அப்படி வந்தால், ஆன்லைன் விற்பனைத்தளங்கள், பொருள்களை வாங்கி வைத்து விற்பனை செய்வதில் முழுமையாக அந்நிய முதலீடு அனுமதிக்கப்படமாட்டாது. எனவே, அமேசான், வால்மார்ட் போன்ற வெளிநாட்டு ஆன்லைன் நிறுவனங்களின் முதலீடு பெரிதும் பாதிப்புக்குள்ளாகும். கடந்த ஆண்டுதான் 1,600 கோடி அமெரிக்க டாலருக்கு ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் 77% பங்குகளை வால்மார்ட் நிறுவனம் வாங்கியிருந்தது. மேலும், ஒரு வாடிக்கையாளரின் (vendor)  மொத்த பொருளில் 25 சதவிகிதத்துக்கும் அதிகமான பொருள்களை ஒரு இணையதளத்தின் மூலமாக மட்டுமே விற்கக்கூடாது என்றும் கூறியிருக்கிறது. அதேபோல, நிறுவனங்கள் பிரத்யேகமாக எந்த ஒரு இணைய தளத்தின் மூலமும் விற்கக்கூடாது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இதன்காரணமாக, குறிப்பிட்ட நிறுவன செல்போன்கள் முழுவதையும் ஒரே ஆன்லைன் விற்பனைத்தளத்தின்மூலம் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமேசான்

இந்த விதிமுறை மாற்றங்களைச் செயல்படுத்த வேண்டுமென்றால் மற்ற நிறுவனங்களோடு செய்யப்பட்டிருக்கும் ஒப்பந்தங்களை மாற்றியமைக்க வேண்டும். அதன்காரணமாக நிறைய வருமான இழப்புகளையும் தனித்துவத்தையும் இழக்க நேரிடும். உதாரணத்துக்கு, ஜியோமி செல்போன்களை ஃப்ளிப்கார்ட் நிறுவனம் மட்டுமே விற்பனை செய்துவருகிறது. அந்த செல்போன்களுக்கு இருக்கும் வரவேற்பு, மறைமுகமாக ஃப்ளிப்கார்ட் நிறுவனத்துக்கும் வருமானம் அதிகரிக்க உதவும். இனி இந்த நிலை இருக்காது. அனைத்து ஆன்லைன் நிறுவனங்கள் மட்டுமல்லாது ஷோ ரூம்களிலும் விற்பனை செய்யப்படும் கட்டாயம் எழுந்துள்ளது. இவை அனைத்துமே ஆன்லைன் விற்பனை நிறுவனங்களின் தனித்துவத்தை நீர்த்துப்போகச்செய்வதாக உள்ளது. வியாபாரம் பரவலாக்கப்படாமல், ஆன்லைன் நிறுவனங்கள் மட்டுமே விற்பனையில் கொழிப்பதைத் தடுப்பதற்காகத்தான் இந்த விதிமுறை மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப, ஆன்லைன் விற்பனைத்தளங்கள் தங்களது விற்பனை முறையை மாற்றியமைத்தால் செயல்பாட்டுச்செலவும் அதிகரிக்கும், வருமானமும் பெருமளவு பாதிக்கும். 

செல்போன்

எனவே, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நல்ல உறவின் வெளிப்பாடாக, இருதரப்பு வர்த்தகமும் பாதிக்காதவண்ணம் அமெரிக்க நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்க வேண்டுமென்று அமெரிக்க தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தியத் தரப்பில் இதுகுறித்து எந்த உறுதியும் அளிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இந்திய பிரதமரைப் பொறுத்தவரை, வரவுள்ள பொதுத்தேர்தலில் வெற்றிபெறுவதற்கு உள்நாட்டு சில்லறை வர்த்தகர்களின் ஆதரவு தேவைப்படுவதை உணர்ந்துள்ளார். எனவே, இந்த ஆன்லைன் வர்த்தக விதிமுறை மாற்றங்களை விரைந்து அமல்படுத்தி அவர்களின் நன்மதிப்பைப் பெறுவதில் கவனத்தோடு இருப்பதாகத் தெரிகிறது. எனினும், அமேசான், வால்மார்ட் நிறுவனங்கள், டெல்லியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் வாயிலாக இந்த விதிமுறை மாற்றங்களில் சலுகைகளைப் பெறுவதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. உலகளாவிய வர்த்தக பெருநிறுவனங்களுக்கும், உள்ளூர் சில்லறை வர்த்தகர்களுக்குமான இந்த வர்த்தகப்போர் அடுத்து எப்படி மாறும் என்பது பிப்ரவரி தொடங்கியபிறகுதான் தெரியவரும்.


டிரெண்டிங் @ விகடன்