`உரிமைப் போராட்டத்தில் என்னுடன் சேர்ந்து போராடுவார்’ - தோழியை மணந்தார் ஹர்திக் படேல்! | Hardik Patel Gets Married to Childhood Friend

வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (28/01/2019)

கடைசி தொடர்பு:08:30 (28/01/2019)

`உரிமைப் போராட்டத்தில் என்னுடன் சேர்ந்து போராடுவார்’ - தோழியை மணந்தார் ஹர்திக் படேல்!

குஜராத்தில் படேல் சமூக மக்களுக்காகப் போராடிய ஹர்திக் படேலுக்குத் திருமணம் நடந்துள்ளது.

ஹர்திக் படேல்

photo credit: twitter/@ViratPa00215994

குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தாருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு கோரி 24-வயதில் போராட்டத்தில் குதித்தவர் ஹர்திக் படேல். கடந்த 2015-ம் ஆண்டு நடந்த இவரது போராட்டத்தால் குஜராத் மாநிலமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது. இந்தப் போராட்டத்தின் இறுதியில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இருப்பினும் படேல் சமூக மக்களுக்கு உரிய அங்கீகாரம் தரப்படவில்லை.

ஹர்திக்

photo credit: twitter/@ViratPa00215994

இதனால் தான் நடத்தி வரும் பட்டிடார் அனாமத் அந்தோலன் சமிதியின் (Patidar Anamat Andolan Samiti) அமைப்பு மூலம் அம்மக்களுக்காகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார் ஹர்திக் படேல். இதனால் குஜராத்தில் ஆளும் பா.ஜ.க-வுக்கு சிம்ம சொப்பனமாக இவர் விளங்கி வருகிறார். இந்நிலையில் ஹர்திக் படேல் இல்லற வாழ்வில் இணைந்துள்ளார். பால்ய கால தோழி கிஞ்சல் பரிக் என்பவரும் ஹர்திக்கும் நீண்ட நாள்களாகக் காதலர்களாக இருந்து வந்தனர்.

ஹர்திக்

photo credit: twitter/@ViratPa00215994

ஹர்திக்கின் சகோதரி மோனிகாவுடன் படித்தவர்தான் இந்தக் கிஞ்சல். இவர்கள் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதிக்க நேற்று சுரேந்திராநகர் மாவட்டம், திக்சார் கிராமத்தில் ஐதிக முறைப்படி நேற்று இருவரும் திருமணம் செய்துகொண்டனர். எளிய முறையில் நடந்த இவர்களது திருமணத்தில் 100 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் திருமண வரவேற்பு அகமதாபாத்தில் நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லற வாழ்வில் இணைந்துள்ள படேலுக்கு வாழ்த்துகள் குவிந்துள்ளது. திருமணம் குறித்துப் பேசியுள்ள ஹர்திக், ``படேல் சமூகத்தின் உரிமைக்கான போராட்டத்தில் என் மனைவியும் உதவியாக இருப்பார்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க