`இந்து பெண்களைத் தொடுபவர்களின் கை இருக்கக் கூடாது’ - மத்திய அமைச்சர் மீண்டும் சர்ச்சை பேச்சு! | Hand that touches Hindu woman should not exist, says Ananth Kumar Hegde

வெளியிடப்பட்ட நேரம்: 09:01 (28/01/2019)

கடைசி தொடர்பு:09:17 (28/01/2019)

`இந்து பெண்களைத் தொடுபவர்களின் கை இருக்கக் கூடாது’ - மத்திய அமைச்சர் மீண்டும் சர்ச்சை பேச்சு!

தாஜ்மகால் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார் மத்திய இணை அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே.

அனந்தகுமார் ஹெக்டே

மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவோர் இணை அமைச்சராக இருப்பவர் அனந்தகுமார் ஹெக்டே. இவரின் பேச்சு அவ்வப்போது சர்ச்சையாவது வழக்கமாகி வருகிறது. அந்தவகையில் `மதச்சார்பற்றவர்களுக்குச் சொந்த அடையாளம் கிடையாது. அவர்களுக்குத் தங்கள் பெற்றோர் யார் என்பதுகூட தெரியாது. மதச்சார்பின்மை என்ற வார்த்தை இல்லாதவாறு அரசியல் சட்டத்தை நாங்கள் திருத்துவோம்' என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பின்னர், ``எனக்கு அரசியல் சாசனம்தான் எல்லாம்" எனக் கூறி இதற்காக மன்னிப்புக் கோரியிருந்தார்.

ஹெக்டே

இப்படி இருக்கையில், மீண்டும் இதேபோல் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் நடந்த இந்து அமைப்பின் விழாவில் கலந்துகொண்ட இவர், ``தாஜ்மகால் முகலாயப் பேரரசர் ஷாஜகானால் அவரின் மனைவி மும்தாஜுக்காகக் கட்டப்பட்டது. இதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், தாஜ்மகால் கட்டப்படுவதற்கு முன்பாக அந்த இடத்தில் தேஜோ மஹாலயா எனும் சிவன் கோயில் இருந்தது. சாதி என்கிற விஷம் 700 முதல் 800 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய வரலாற்றில் நுழைந்தது. 

ஹெக்டே

முன்பு இருந்து பல விஷயங்களுக்கு தற்போது புதிய பெயர் வழங்கப்பட்டுவிட்டது. சாதியால் நம் வலிமையை இழந்திருக்கிறோம். இனி நமது சமுதாயத்தின் முன்னுரிமைகள் குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும். சமூகம் குறித்த நமது பார்வையில் மாற்றம் ஏற்பட வேண்டும். சாதியைப் பற்றி சிந்திக்கக் கூடாது" என்று பேசியவர், ``இந்து பெண்ணை எந்தக் கையாவது தொட்டால், அந்தக் கை இருக்கக் கூடாது" என்று பேசினார். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க