`எனக்கே அவரை பாக்கணும் போல இருக்கு’ - மத்திய அமைச்சரின் பாராட்டைப் பெற்ற கால்பந்தாட்ட வீரர் | Kerala Groom Leaves Marriage To Play Football

வெளியிடப்பட்ட நேரம்: 18:46 (28/01/2019)

கடைசி தொடர்பு:18:46 (28/01/2019)

`எனக்கே அவரை பாக்கணும் போல இருக்கு’ - மத்திய அமைச்சரின் பாராட்டைப் பெற்ற கால்பந்தாட்ட வீரர்

தங்களுடைய கனவுகளுக்கான, பலர் நிறைய விஷயங்களைத் தியாகம் செய்துள்ளனர் என்று கேட்டிருப்போம். ஆனால், கேரளாவைச் சேர்ந்த ஒரு இளைஞர் செய்துள்ள விஷயம், அரிதினும் அரிதானது. 

கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர் ரித்வான். சிறந்த கால்பந்தாட்ட வீரரான இவர், கேரளாவில் உள்ள ஃபிஃபா மஞ்சேரி என்ற கால்பந்தாட்ட அணியில் இணைந்து விளையாடிவருகிறார். இவருக்கு, கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெறவிருந்தது.  அதே நாளில்,  ‘7 எஸ் லீக்’ என்ற கால்பந்தாட்டப் போட்டி மலப்புரத்தில் நடந்துள்ளது. கால்பந்தாட்டத்தில் 11 வீரர்கள் விளையாடுவார்கள். ஆனால், 7 எஸ் போட்டியில் 7 வீரர்கள் மட்டுமே விளையாடுவார்கள்.  இது, கேரளாவில் மிகவும் பிரபலமாக நடைபெறும்.   

கால்பந்தாட்டத்தில் அதிக ஆர்வம்கொண்ட ரித்வானால் திருமணத்தையும் தள்ளிப்போட முடியவில்லை, கால்பந்தாட்டப் போட்டியையும் விட முடியவில்லை. அதனால், திருமணம் நடைபெறவிருந்த  அன்று காலை மணப்பெண்ணைச் சந்தித்த அவர், 7 எஸ் போட்டியில் கலந்துகொள்ள தனக்கு சிறிது நேரம் அனுமதி வேண்டும் என்றும், திருமணம் நிச்சயிக்கப்பட்ட நேரத்துக்குள் தான் வந்துவிடுவேன் என்றும் கேட்டுவிட்டு போட்டியில் பங்கேற்றுள்ளார். 

அன்று நடைபெற்ற போட்டியில், அதிர்ஷ்டவசமாக ரித்வானின் அணி வெற்றிபெற்றது. போட்டியில் வெற்றிபெற்ற அதே மகிழ்ச்சியுடன் வந்து தன் திருமணத்தில் கலந்துகொண்டார். மிகவும் சிறப்பாக அவரின் திருமணமும் நடந்துமுடிந்துள்ளது.  இருந்தும், மணப்பெண் வீட்டினர் நித்வான் மீது சற்று எரிச்சலில் இருந்துள்ளனர். தன் வருங்காலக் கணவரின் செயலைக்கண்டு ஆச்சர்யத்தில் உறைந்துபோனார் மணப்பெண். இந்தச் சம்பவம், கடந்த இரு தினங்களாக சமூகவலைதளங்களில் ஹிட் அடித்துவருகிறது. 

ரித்வானின் செயலை ஒரு ஊடகம் செய்தியாக வெளியிட, அது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் கண்ணில் பட்டுள்ளது. உடனடியாக அதை ஷேர் செய்து, அதனுடன் ‘ மணப்பெண்ணிடம் அனுமதி பெற்றுக்கொண்டு விளையாடியுள்ளார் ரித்வான்.  இதன் மூலம் அவருக்கு கால்பந்தின்மீது எவ்வளவு ஆர்வம் உள்ளது எனத் தெரிகிறது. எனக்கு அவரைப் பார்க்க வேண்டும்’ எனத் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.