காலமானார் `கார்கில் நாயகன்’ ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்! | George Fernandes Passes Away at 88

வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (29/01/2019)

கடைசி தொடர்பு:10:21 (29/01/2019)

காலமானார் `கார்கில் நாயகன்’ ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்!

போர்க்குணத்தின் அடையாளம், சோஷலிஸக் கொள்கை கொண்ட தேசியத் தலைவர்,  மத்தியில் தேசிய ஜனநாயக முன்னணி அரசு உருவாக முக்கியக் காரணமானவர்...  இப்படிப் பல தனித்துவ அடையாளங்களைக் கொண்ட ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், வயது மூப்பின் காரணமாக இன்று காலை காலமானார். 

ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்

கர்நாடகாவைச் சேர்ந்தவர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ். தொழிற்சங்கங்களின் தலைவராக, 1970-களில் தேசிய அளவில் ரயில்வே ஸ்டிரைக்கை நடத்திப் பிரபலமானார். ஜனதா கட்சியின்மூலம் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், பிறகு ஐக்கிய ஜனதா தளத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். வாஜ்பாய் தலைமையின் கீழ் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில், 1998 முதல் 2004 வரை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். கார்கில் போரின்போது, இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கு அமைச்சராக இருந்தார். 

 இந்திராகாந்தி கொண்டுவந்த எமெர்ஜென்ஸி நடவடிக்கையின்போது, அதை வித்தியாசமான முறையில் எதிர்கொண்டவர்கள் பட்டியலில் இவர் பெயர் முன்னிலை பெறும்.  ஜெர்மனியைத் தலைமை இடமாகக் கொண்டிருக்கும் சர்வதேச சோஷலிஸ அமைப்பின் ஒரே இந்திய உறுப்பினராக ஜார்ஜ் இருந்துள்ளார். 

கடைசியாக, 2009 -ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் 2010 ஜூலை மாதம் வரை பீஹார் மாநிலத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார்.  பின்னர், Alzheimer (மறதி) என்ற நோயால் பாதிக்கப்பட்ட இவர், அரசியலில் இருந்து விலகி ஓய்வெடுத்துவந்தார். ஊழல் வழக்குகள், குடும்பச் சண்டைகள் போன்ற பல பிரச்னைகளுக்கு இடையில், தன் உடல் நோய்களுடன் போராடிவந்தார்.  இவர், வயது மூப்பின் காரணமாக, தன் 88 வயதில் டெல்லியில் உள்ள தன் வீட்டில் இன்று காலை காலமானார்.