மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் நள்ளிரவு 'ரெய்டு'! - தைரிய போலீஸை டிரான்ஸ்ஃபர் செய்த பினராயி | woman Cop who raided CPM office in Kerala transferred

வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (29/01/2019)

கடைசி தொடர்பு:11:45 (29/01/2019)

மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் நள்ளிரவு 'ரெய்டு'! - தைரிய போலீஸை டிரான்ஸ்ஃபர் செய்த பினராயி

சிறுமிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய இருவரை திருவனந்தபுரம் மெடிக்கல் கல்லூரி போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறைவைத்திருந்தனர். கைதுசெய்யப்பட்டவர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்திய ஜனநாயக சங்கத்தைச் சேர்ந்தவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். போலீஸார் அனுமதி மறுத்தனர். இதனால், கோபமடைந்த கும்பல், போலீஸ் நிலையத்தின்மீது கல்வீச்சு நடத்திவிட்டு ஓடியது. கல்வீச்சு நடத்தியவர்களில் சிலர், திருவனந்தபுரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஒளிந்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. திருவனந்தபுரம் துணை கமிஷனர் சைத்ரா ஜான் தெரசா, கடந்த 24-ம் தேதி நள்ளிரவு, மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்துக்குள் புகுந்து ரெய்டு நடத்தினார்.  கட்சி அலுவலகத்தில் யாரும் கிடைக்கவில்லை. 

போலீஸ் அதிகாரி சைத்ரா ஜான் தெரசாவை இடமாற்றம் செய்த பினராயி

மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ரெய்டு நடத்திய போலீஸ் அதிகாரியை சட்டமன்றத்திலேயே கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்தார். கேரள முதல்வரிடம்தான் போலீஸ் துறையும் உள்ளது. ''கட்சி அலுவலகத்தில் ரெய்டு நடத்தியது ஏற்புடையதல்ல. போலீஸ் நிலையத்தில் தாக்குதல் நடத்திய யாரும் அங்கே ஒளியவும் இல்லை. ரெய்டு நடத்திய பெண் போலீஸ்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி என்னிடத்தில் புகார் வந்துள்ளது'' என்று பினராயி சட்டமன்றத்தில் பேசினார். 

மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சோதனை நடத்திய சைத்ரா ஜான் தெரசா இடமாற்றம் செய்யப்பட்டார்.  இந்த விவகாரம்குறித்து விசாரிக்க, மனோஜ் ஆபிரகாம் என்ற உயர் போலீஸ் அதிகாரி நியமிக்கப்பட்டார். விசாரணை நடத்திய மனோஜ் ஆபிரஹாம், இணை கமிஷனர் சைத்ரா  மீது எந்தத் தவறும் இல்லை என்று கேரள டிஜிபி லோக்நாத் போக்ராவிடம் அறிக்கை அளித்தார். இருப்பினும்,  சைத்ரா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

பெண் போலீஸ் அதிகாரி சைத்ரா மீது நடவடிக்கை எடுக்க இந்தச் சம்பவம் மட்டும் காரணம் இல்லை. ஜனவரி 9-ம் தேதி நடந்த பாரத் பந்தின்போது, எஸ்.பி.ஐ வங்கிமீது தாக்குதல் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சி யூனியனைச் சேர்ந்த 8 அரசு ஊழியர்களைப் பிடித்து சைத்ரா சிறையில் தள்ளிவிட்டார். சைத்ராவின் இடமாற்றத்துக்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. 

மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம்

கேரள தலைமைச் செயலக கூடுதல் செயலாளராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற சஜன் பீட்டர் , ''விளைவுகளைப் பற்றி யோசிக்காமல், தங்கள் பணியில் நேர்மையாகச் செயல்படும் அதிகாரிகளை அரசியல் காரணத்துக்காகப் பந்தாடுவது நல்லது அல்ல. என்னைப் பொறுத்தவரை சைத்ராவுக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் பத்ம விருதுகளுக்கு இணையானது'' என்று கூறியுள்ளார். 

''சபரிமலைக்குச் சென்ற மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனைத் தடுத்த போலீஸ் அதிகாரி யாதீஷ் சந்திராவைப் பாராட்டிய பினராயி விஜயன், தங்கள் கட்சி அலுவலகத்தில் ரெய்டு நடத்திய பெண்  போலீஸ் அதிகாரியை நடத்தும் விதம் அவரின் நேர்மை மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது'' என்று விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க