10 வருடங்களில் 30 குட்டிகளை ஈன்ற மத்தியப்பிரதேசப் பெண் புலி | Tigress 'Collarwali' in Madhya Pradesh Sets Record by Giving Birth to 30 Cubs Over 10 Years!

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (29/01/2019)

கடைசி தொடர்பு:22:00 (29/01/2019)

10 வருடங்களில் 30 குட்டிகளை ஈன்ற மத்தியப்பிரதேசப் பெண் புலி

பெண் புலி

மத்தியப்பிரதேசத்தின் பென்ச் புலிகள் காப்பகத்தைச் (Pench Tiger Reserve) சார்ந்த காலர்வாலி (Collarwali) என்று அழைக்கப்படும் பெண் புலி இதுவரை 30 குட்டிகளை ஈன்றுள்ளது. கடந்த 10 வருடங்களில் இந்த 30 குட்டிகளைப் பெற்றெடுத்துள்ளது காலர்வாலி. சில தினங்களுக்கு முன் நிகழ்ந்த எட்டாவது பிரசவத்தில் நான்கு குட்டிகளை ஈன்றதன் மூலம் 30 குட்டிகள் என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளது. இதுவரை எங்கும் இதுபோன்று நிகழ்ந்தது இல்லை எனத் தெரிவிக்கின்றனர். ரேடியோ காலர் போன்று இருப்பதால் பார்வையாளர்கள் காலர்வாலி என்ற பெயரை வைத்துள்ளனர். நான்கு குட்டிகளுடன் காலர்வாலி நலமாக இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பென்ச் புலிகள் காப்பகத்தின் ராணி என்றும் இளவரசி என்றும் அழைக்கப்படுகிறது காலர்வாலி. மே 2008-ல் நடந்த முதல் பிரசவத்தில் பிறந்த மூன்று குட்டிகளுமே 24 நாள்களில் நிமோனியா காய்ச்சலால் இறந்துள்ளன. கடினமான காலநிலையில் இருந்து குட்டிகளைக் காப்பாற்றும் திறன் இல்லாமல் இருந்துள்ளது காலர்வாலி.

அதன்பின் அக்டோபர் 2008-ல் இரண்டாவது பிரசவத்தில் நான்கு குட்டிகளைப் பிரசவித்தது. 2008-லிருந்து 2013-க்குள் 18 குட்டிகளை ஈன்றதில் 14 குட்டிகள் வரை தற்போது உயிருடன் உள்ளன. 2017-ம் ஆண்டில் குட்டிகளின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்ததால் பரவலாகக் கவனம் பெற்றது. தற்போது காலர்வாலிக்கு வெறும் 14 வயதுதான் ஆகிறது. ஒரு புலியின் சராசரி ஆயுளே 14 - 15 வருடங்கள்தான். பென்ச் புலிகள் காப்பகமானது 1,179 சதுர கிலோமீட்டர் பரப்புக்கு விரிந்துள்ளது. அவற்றில் 411 சதுர கிலோமீட்டர் விலங்குகள் அதிகம் வாழ்கின்ற பகுதி. இதன் மூலம் புலிகளின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2016-லிருந்து இதுவரை மத்தியப்பிரதேசத்தில் 34 புலிகள் இறந்துள்ளன. காலர்வாலி எனும் பெண்புலியானது அதிகம் குட்டிகளை ஈன்றெடுத்த புலியாக மட்டுமல்லாமல் அதிக காலம் வாழும் புலியாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.