30 நிமிடத்தில் திரும்பணும்;10 நிமிடம் லேட்டா வந்ததால் முத்தலாக்! - மனைவிக்கு அதிர்ச்சியளித்த கணவன் | Man gives triple talaq over the phone to wife for reaching home 10 minutes late in Etah

வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (30/01/2019)

கடைசி தொடர்பு:11:50 (30/01/2019)

30 நிமிடத்தில் திரும்பணும்;10 நிமிடம் லேட்டா வந்ததால் முத்தலாக்! - மனைவிக்கு அதிர்ச்சியளித்த கணவன்

இஸ்லாமியர்கள், மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நிலை ஏற்கெனவே பரவலாக நடைமுறையில் இருந்துவந்தது. முத்தலாக் முறையைத் தடைசெய்ய ஏதுவாக, இஸ்லாம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்புச் சட்ட மசோதா, கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. என்றாலும், இந்த மசோதா, மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. இதனால், மீண்டும் அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது மத்திய அரசு. 

முத்தலாக்

இதற்கிடையில், மனைவி  10 நிமிடம் தாமதமாக வீட்டுக்கு வந்ததால், செல்போனிலேயே கணவன் முத்தலாக் சொல்லிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் எடாவைச் சேர்ந்த பெண்ணுக்குதான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து அந்தப் பெண் அளித்துள்ள புகாரில், ``உடல்நிலை சரியில்லாத பாட்டியைப் பார்ப்பதற்காக, என் அம்மா வீட்டுக்குச் சென்றேன். போகும்போதே அரைமணி நேரத்தில் திரும்பிவர வேண்டும் என கணவர் கூறியிருந்தார். எதிர்பாராதவிதமாக 10 நிமிடம் லேட்டாகச்  சென்றேன். இதற்காக, எனது சகோதரரைத் தொடர்புகொண்டு, எனக்கு முத்தலாக் கூறிவிட்டார். அவரின் இந்த நடவடிக்கை என்னை மனதைச் சிதைத்துவிட்டது. இந்த விவகாரத்தில், அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், எனக்கு தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை" என்று வருத்தம் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, அந்தப் பெண் தனது கணவரால் வரதட்சணைக் கொடுமைகளையும் சந்தித்துள்ளார். ``வரதட்சணை கொடுக்கவில்லை என்று, கணவர் உட்பட அவரின் குடும்பத்தினர் என்னைத் தாக்கினார்கள். அவர்களின் செயலால் நான் ஏற்கெனவே ஒரு முறை கருக்கலைப்பு செய்துள்ளேன்" என்றும் புகார் கூறியுள்ளார். அவரின் புகாரைத் தொடர்ந்து, எடா பகுதி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க