மும்பையின் ரியல் `பாட்ஷா', மறுபிறவியில் வியட்நாமியராகப் பிறக்க ஆசைப்பட்டது ஏன்? | George Fernandes Once Said He Would Like to Be Reborn As A Vietnamese

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (30/01/2019)

கடைசி தொடர்பு:12:30 (30/01/2019)

மும்பையின் ரியல் `பாட்ஷா', மறுபிறவியில் வியட்நாமியராகப் பிறக்க ஆசைப்பட்டது ஏன்?

மும்பை நகரத்தில், பால் தாக்கரேவுக்கு இணையாகக் கோலோச்சக்கூடிய ஒரே மனிதர், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்தான். பால்தாக்கரேவால் எப்படி மும்பையை ஸ்தம்பிக்கவைக்க முடிந்ததோ, அதேபோல ஜார்ஜ் ஃபெர்னாண்டஸாலும் மும்பையை முடக்க முடிந்தது. தொழிற்சங்கவாதியாக அடையாளம் காணப்பட்டாலும், சாதாரண டாக்ஸி டிரைவர்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை அவரை நேசித்தனர். ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் பந்த்துக்கு அழைப்புவிடுத்தால், வியாபாரிகள் கண்களை மூடிக்கொண்டு கடையை அடைத்துவிடுவார்கள். மும்பை மக்களிடம் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸுக்கு  இருந்த செல்வாக்கு அப்படி. இதனால்தான், 1967-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில்,  காங்கிரஸ் கட்சியில் செல்வாக்குடன் இருந்த எஸ்.கே.பாட்டீலை இவரால் வீழ்த்த முடிந்தது. மாபெரும் மும்பை நகரின் ரியல் பாட்ஷாவாக ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் வலம்வந்தார் என்பதே உண்மை. 

ஜார்ஜ் ஃபெர்ணான்டஸ்

ராணுவ அமைச்சராக ஃபெர்னாண்டஸ் இருந்த சமயத்தில், இரு முக்கிய சம்பவங்கள் அரங்கேறின. கார்கில் போரில் பாகிஸ்தானைத் துரத்தியடித்தது, பொக்ரான் அணுகுண்டு சோதனை. இந்தியாவின் இந்த அற்புதமான இரு வெற்றிகளுக்கும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸின் உழைப்பும் முக்கியக் காரணம். உலகின் உயரமான போர்க்களமான சியாச்சினுக்கு மட்டும் 32 முறை இவர் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியாவின் எந்த ராணுவ அமைச்சரும் சியாச்சினுக்கு இத்தனை முறை சென்றதில்லை. கடுமையான பனிப்பொழிவில் பணிபுரியும் ராணுவ வீரர்களை ஊக்கப்படுத்தவே ஃபெர்னாண்டஸ் சியாச்சின் பயணங்களை அடிக்கடி மேற்கொண்டார். இவர், பிளம் கேக் ப்ரியரும்கூட.  ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போதும், சியாச்சின் பனிமலை வீரர்களுக்கு பிளம் கேக் அனுப்புவதையும்  வழக்கமாகக்கொண்டிருந்தார். சுமார் 45,000 பிளம் கேக்குகளை விசேஷமாக பேக் செய்து, சியாச்சின் கொண்டுசெல்லப்பட்டு, ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும். 

பாதுகாப்புத்துறை அமைச்சராக ஃபெர்ணான்டஸ்

பெங்களுருவில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களிடையே ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் உரை நிகழ்த்தியபோது, `மறுபிறவி என்று இருந்தால், வியாட்நாமியனாகப் பிறக்க விரும்புகிறேன்' என்று தனது ஆசையை வெளியிட்டார்.  `வியட்நாமியர்கள், கடும் உழைப்பாளிகள்; அர்ப்பணிப்பு உணர்வுமிக்கவர்கள்; ஒழுக்கம் மிக்கவர்கள். அமெரிக்காவுடன்  போரில் ஈடுபட்டு 30 லட்சம் வியட்நாமியர்கள் இறந்தனர். இருப்பினும், அந்த நாடு எழுந்து நிற்கிறது. வியாட்நாமியர்களின் தீர்க்கமான சிந்தனைதான் அவர்களின் வெற்றிக்குக் காரணம் என்றும் ஃபெர்னாண்டஸ் குறிப்பிட்டார். 

வியட்நாம் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியாவின் ஒரே ராணுவ அமைச்சர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க