`காந்தி கொல்லப்பட்ட செய்திகேட்டு மயங்கி விழுந்துட்டேன்!'- கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் #MahatmaGandhi | i was fainted when i hear gandhi's death, says krishnammal jegannathan

வெளியிடப்பட்ட நேரம்: 12:24 (30/01/2019)

கடைசி தொடர்பு:12:24 (30/01/2019)

`காந்தி கொல்லப்பட்ட செய்திகேட்டு மயங்கி விழுந்துட்டேன்!'- கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் #MahatmaGandhi

கிருஷ்ணம்மாள்

கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், 90 வயதைக் கடந்தும் மக்களுக்காகப் போராடி வருபவர். எளிமையான குடும்பத்தில் பிறந்து, படிப்பின் வழியாக இந்தச் சமூகத்துக்கு முன்மாதிரி பெண்மணியாக வாழ்ந்துவருபவர். அவரிடம் பேசினால், 5 நிமிடங்களுக்கு ஒரு முறையேனும் காந்தி, வினோபா ஆகியோரின் வாழ்க்கையிலிருந்தோ அவர்கள் சொல்லியக் கருத்திலிருந்தோ மேற்கோள் காட்டிவிடுவார். அந்தளவுக்கு கிருஷ்ணம்மாள் ஜெகநாதனின் வாழ்வோடு இருவரின் கருத்துகளும் கலந்துவிட்டன.

காந்தியைப் பற்றி அவர் கூறுகையில், ``காந்தியை நேரில் பார்க்காதவர்கள்கூட அவரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டனர். அவரோட சொல்லைக் கேட்டு நடக்க மக்கள் தயாராக இருந்தனர். அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு எப்போதுமே உண்டு. 1946 -ம் வருஷம் என நினைக்கிறேன். என்னை அன்போடு வளர்த்த செளந்தரம் அம்மா, வைத்தியநாத ஐயர் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அங்கே, சிலர் கூடி தீவிரமாப் பேசிட்டு இருந்தாங்க. அவங்க பேசறதை வைத்தே ரொம்ப முக்கியமான விஷயம்னு புரிஞ்சுக்க முடிஞ்சுது.

சென்னையில், தக்கர் பாபா வித்யாலயாவைத் திறந்துவெச்சிட்டு மதுரைக்கு வந்தார் காந்தி. அவரை நேரடியா மதுரை ரயில்வே ஸ்டேஷனில் இறங்க வைத்தால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாதுனு, மதுரைக்கு முன் எந்த ஸ்டேஷனில் இறக்கிக் கூட்டிட்டு வர்றது என்பதைத்தான் அங்கே ஆலோசனை செய்திட்டு இருந்தாங்க. அப்புறம் எல்லோரும் ஒருமனதா விலாங்குடி ஸ்டேஷனில் காந்திக்கு வரவேற்பு கொடுக்கலாம்னு முடிவு பண்ணினாங்க. எனக்கும் அங்கே போக ஆசையிருந்துச்சு. நானும் அந்த ஸ்டேஷனுக்குப் போனேன். ஆனா, காந்தியைப் பார்க்க முடியல. அவர் பின்னாடி வந்த செளந்தரம்மா, காரில் என்னையும் ஏத்திக்கிட்டாங்க.

காந்தி

அடுத்து மதுரையில பெரிய மைதானத்துல கூடியிருந்த கூட்டத்துல, மேடையில எல்லோரும் ஏறணும்னு முண்டியடிச்சிட்டு இருந்தாங்க. எல்லாத்தையும் பார்த்துகிட்டு இருந்த மகாத்மா காந்தி, `அமைதியா இருங்க'னு சொல்லிட்டே இருந்தார். அவர் சொல்லியும் யாரும் அடங்கல. கொஞ்ச நேரம் சொல்லிப் பார்த்த காந்தி மேடையிலேயே சுருண்டு படுத்துக்கிட்டார். ஒருவழியா கூட்டம் முடிஞ்சது. விடுதியில சுசீலா நாயரோடு என்னையும் தங்கி காந்திஜியை கவனிச்சிக்கச் சொன்னாங்க செளந்தரம்மா. எனக்கே அதை நம்ப முடியல. நாம ஒரு தடவையாவது பார்க்கணும்னு நினைச்ச காந்தியைக் கவனிச்சிக்கிற பொறுப்பு கிடைச்சது ஆச்சர்யமா இருந்துச்சு. அப்போ பல பேரு வந்து மணிக்கணக்கா காந்தியோடு பேசிட்டுப் போவாங்க. எனக்குத் தெரிஞ்ச அரைகுறை இங்கிலீஷ்ல நானும் ஏதாவது கேட்பேன். அந்த மூணு நாள்களை மறக்கவே முடியாது.

சுதந்திரம் கிடைச்ச அடுத்த வருஷம், நான் அப்போ காலேஜ்ல படிச்சிட்டு இருந்தேன். அன்னிக்கு காலேஜ் சீக்கிரம் முடிஞ்சுட்டதால விடுதிக்கு வந்துவிட்டேன். சாயந்தரம் 5 மணி இருக்கும் ரேடியோவில், `பிரார்த்தனை செய்யச் சென்ற இடத்தில் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்'னு அறிவிச்சாங்க. அதைக் கேட்டதும் அந்த இடத்திலேயே நான் மயக்கமாகிட்டேன். அவர் சொன்ன வார்த்தைகளைத்தான் என் வாழ்க்கை முறையா வாழ்ந்துட்டு இருக்கேன்" என்கிறார் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்.