சட்டையைக் கழற்றிய போலீஸ்... குளிரில் நடுங்கிய 3 வயது குழந்தை... அஸ்ஸாமில் நடந்த கொடுமை | Assam Security Personnel removed 3-Year-Old Jacket

வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (30/01/2019)

கடைசி தொடர்பு:13:10 (30/01/2019)

சட்டையைக் கழற்றிய போலீஸ்... குளிரில் நடுங்கிய 3 வயது குழந்தை... அஸ்ஸாமில் நடந்த கொடுமை

மத்திய அரசு, இந்திய குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தில் இருந்து  அஸ்ஸாமில் வந்து தஞ்சமடைந்தவர்கள், வெகுவாகப் பாதிக்கப்படுவார்கள். அவர்கள், பல வருடங்களுக்கும் மேலாக இங்கு இருந்தாலும், மத்திய அரசின் திட்டம் நிறைவேற்றப்பட்டால் பிற நாட்டு மக்கள் இந்தியாவை விட்டு வெளியேற்றப்படுவர்.

அசாம் குடியுரிமை போராட்டம்

இதனால், அந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் பொதுமக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். அரசு அதிகாரிகள், அமைச்சர்களைக் கண்டாலே கறுப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். இதனால், அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள அதிகாரிகளும், காவல் துறையினரும் கறுப்பு நிறத்தைக் கண்டு எரிச்சலடைந்துள்ளனர்..

முதல்வர் சர்பானந்தா சோனாவால்

இந்நிலையில் நேற்று, அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தில் நடைபெற்ற ஒரு அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில், முதல்வர் சர்பானந்தா சோனாவால் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பல ஆயிரக்கணக்கான மக்களும் பா.ஜ.க தொண்டர்களும் வந்திருந்தனர். குடியுரிமை தொடர்பான தொடர் போராட்டங்கள் காரணமாக நேற்று நடந்த  நிகழ்ச்சியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அப்போது, முதல்வர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தன் மூன்று வயது குழந்தையுடன் வந்த பெண்ணைக் காவலர்கள் தடுத்துநிறுத்தி, சிறுவன் அணிந்திருக்கும் கறுப்புச் சட்டையை அகற்றினால்தான் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர். பிறகு, குழந்தை சட்டையில்லாமல் அனுமதிக்கப்பட்டான்.

இந்த விவகாரம், அஸ்ஸாமில் பெரும் சர்ச்சையாகியுள்ளது. தற்போது பனிக்காலம் என்பதால், அங்கு 13 டிகிரி செல்ஷியஸ் அளவில் குளிர் இருக்கிறது. சட்டையை போலீஸ் கழற்றச் சொன்னதால் குளிரில் குழந்தை நடுங்கியது. இந்த நிலையில், மூன்று வயது குழந்தையின் சட்டையை எப்படி அகற்றுவீர்கள் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிவருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி அதிகாரிகளுக்கு அஸ்ஸாம் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.