வீட்டை விட்டு வெளியேறி 23 நாள்கள் காடுகளில் தங்கிய ஜோடி! | Kerala man and minor girl stayed 23 days in jungle after eloped from house

வெளியிடப்பட்ட நேரம்: 19:38 (30/01/2019)

கடைசி தொடர்பு:19:45 (30/01/2019)

வீட்டை விட்டு வெளியேறி 23 நாள்கள் காடுகளில் தங்கிய ஜோடி!

  காடுகளில் தங்கிய காதல் ஜோடி

Photo Credit: Malayala Manorama

திரைப்படப் பாணியில்  வீட்டைவிட்டு வெளியேறி  23 நாள்கள் காடுகளில் தங்கியிருந்த இளம் ஜோடியைத் தீவிர தேடுல் வேட்டை நடத்தி போலீஸார் கைது செய்துள்ளனர். 

கேரளாவில் மேலுக்காவு பகுதியைச் சேர்ந்தவர் வலையாட்டில் அப்பு ஜார்ஜ். இவர் அப்பகுதியில் உள்ள 18 வயது நிரம்பாத சிறுமியைக் காதலித்து வந்துள்ளார். பின்னர் அந்தச் சிறுமியிடம் சில மாதங்களுக்கு முன்பு அப்பு தனது காதலை தெரிவித்துள்ளார். அப்புவின் காதலை அந்தச் சிறுமி ஏற்றுக்கொண்ட நிலையில், அடுத்த நாளே இருவரும் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இருவரும் வீட்டை விட்டு வெளியேறியதை அறிந்து பெற்றோர்கள் தீவிரமாகச் சிறுமியைத் தேடியுள்ளனர். ஆனாலும், அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளித்த நிலையில் சிறுமியைத் தேடும் பணியில் இறங்கியது போலீஸ்.அந்த இளம் ஜோடிகளை கண்டு பிடிப்பதில் போலீஸாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் அந்தச் சிறுமியின் செல்போன் நம்பரைக் கொண்டு சைபர் செல் பிரிவினர் உதவியுடன் அவர்கள் இருவரும் இலவிழாபூஞ்சிரா என்ற பகுதியில் உள்ள ஒரு காட்டில் இருப்பதை அறிந்துள்ளனர். சிக்னல் காட்டும் திசையை வைத்து அவர்கள் இருக்கும் பகுதியில்  போலீஸார் விரைந்துள்ளனர். ஆனாலும், அந்த ஜோடியைக் கண்டுபிடிக்காத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்தக் காட்டுக்குள் தொடர்ந்து வழக்கமாகச் செல்லும் உள்ளூர் மக்களின் உதவியையும் நாடியுள்ளனர். பின்னர் போலீஸாரும் உள்ளூர் மக்களும் தேடுதல் வேட்டையில் இறங்கிய நிலையில் ஒரு கட்டத்தில் அப்புவின் இருச்சக்கர வாகனத்தைக் கண்டுபிடித்துள்ளனர். 

ஆனால், அந்த ஜோடி மட்டும் அங்கு இல்லை என்பது தெரியவந்தது. இந்தநிலையில் தொடர்ந்து தேடுதல் பணி நீடித்த நிலையில், ஒரு பகுதியில் அந்த ஜோடி தங்கியிருந்த பாறையின் அருகே மாங்காய், தேங்காய் போன்றவற்றை வைத்து சமைத்து சாப்பிட்டுவிட்டு அங்குள்ள பாறையில் தூங்கி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர்கள் பயன்படுத்திய பாத்திரங்கள் மற்றும் அந்தச் சிறுமியின் பேக் இருந்ததையும் கண்டெடுத்துள்ளனர். அவர்கள் நீண்ட தூரம் சென்றிருக்க வாய்ப்பில்லை என்பதை உறுதி செய்த போலீஸார், தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும்  போலீஸ், உள்ளூர் மக்கள் என இரு டீமுக்கும் தொடர்ந்து தண்ணிகாட்டி வந்த அந்த ஜோடி, ஒரு கட்டத்தில் போலீஸ் நெருங்கியதை அறிந்து ஓட்டம் பிடித்துள்ளனர். இருவரும் மாறுபட்ட பகுதியில் ஓடுவதைக் கண்ட போலீஸார் அவர்களைத் துரத்தியுள்ளனர்.

கைது

போலீஸாரிடமிருந்து எஸ்கேப் ஆன அவர்கள் இருவரும் 23 நாள்களுக்குப் பிறகு உள்ளூர் மக்களிடம் சிக்கியுள்ளனர். மீண்டும் அவர்களிடமிருந்து அந்த ஜோடி தப்பிக்க முயன்ற நிலையில் அவர்களைப் பிடித்து ஒரு வீட்டில் அடைத்து வைத்து உணவு கொடுத்துள்ளனர் அந்தப் பகுதியினர். பின்னர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்த நிலையில், அப்புவை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அந்தச் சிறுமியைப் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஆனால், அந்தச் சிறுமியின் பெற்றோர் ஏற்க மறுத்துவிட்டனர். இதைத் தொடர்ந்து அந்தச் சிறுமியைக் கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அப்பு, தோடப்புழா நீதிமன்றத்திலும் சிறுமியை பீர்மேடு நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தி சிறையில் இன்று அடைக்க உள்ளனர். அப்புவின் பின்புலத்தை விசாரித்த போலீஸாருக்கு சில தகவல் கிடைத்துள்ளன. கடந்த இரண்டு வருடத்துக்கு முன்பு சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் அப்பு என்பது குறிப்பிடத்தக்கது .