`ராகுல் உங்கள் அரசியல் வேதனை அளிக்கிறது!’ - மனோகர் பாரிக்கர் | Manohar Parrikar's Letter To Rahul Gandhi

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (30/01/2019)

கடைசி தொடர்பு:22:30 (30/01/2019)

`ராகுல் உங்கள் அரசியல் வேதனை அளிக்கிறது!’ - மனோகர் பாரிக்கர்

மனோகர் பாரிக்கர்

நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் காங்கிரஸ் - பா.ஜ.க கட்சியினருக்கு மோதல்கள் நீடித்து வருகிறது. இந்தநிலையில்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். இதையடுத்து கேரளாவில் நடந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது ரஃபேல் விவகாரம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனப் பாரிக்கர் தெரிவித்ததாகப் பேசினார். இதற்கு மனோகர் பாரிக்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ராகுல் காந்திக்குக் கடிதம் எழுதியுள்ள மனோகர் பாரிக்கர், “ராகுல் காந்தி, எந்தவொரு முன் அறிவிப்பு இன்றி என்னை வந்து சந்தித்து எனது உடல்நலம் குறித்து விசாரித்தீர்கள். கொள்கைரீதியிலாக நமக்குள் பல்வேறு வேறுபாடுகள் இருந்தபோதும் நீங்கள் என்னைத் தனிப்பட்ட முறையில் சந்தித்தது நாகரிக அரசியலாகவே எடுத்துக்கொண்டேன். நான் எனது வாழ்க்கைக்காகப் போராடிக்கொண்டிருக்கிறேன். உங்களது சந்திப்பானது அரசியல் நாகரிகமாக எடுத்துக்கொண்டேன்.

கடிதம்

ஆனால், ஊடகங்களில் வெளிவந்த செய்தி எனக்கு மன அழுத்தத்தை கொடுத்தது. ரஃபேல் விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என நான் சொன்னதாகக் குறிப்பிட்டு பேசியுள்ளீர்கள். நமக்கு இடையே நடந்த 5 நிமிட சந்திப்பில் ரஃபேல் குறித்து எதுவும் கேட்கவும் இல்லை. அதுகுறித்து எதுவும் விவாதிக்கவில்லை.

வாழ்த்து தெரிவிக்கவே என்னைச் சந்திக்க வந்ததாகவே நினைத்தேன். இந்தச் சந்திப்பு உள்நோக்கமானது என்பதைப் பின்புதான் அறிந்துகொண்டேன். இது எனக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. உண்மையை வெளி உலகுக்குத் தெரியப்படுத்தவே இந்தக் கடிதத்தை எழுதியுள்ளேன். இந்தச் சந்திப்பை அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்துவது வேதனை அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.