கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலையைக் காரணம்காட்டி, மனோகர் பாரிக்கர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துவந்தது.
இந்நிலையில், ஓய்வெடுப்பதற்காக ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் கோவா சென்றுள்ளனர். இதனால், நேற்று முன்தினம் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை நேரில் சென்று நலம் விசாரித்தார் ராகுல் காந்தி. இவர்களின் சந்திப்பு, தேசிய அரசியலில் அதிகம் பேசப்பட்டது.
முதல்வரைச் சந்தித்தபின் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் பேசிய ராகுல், “ரஃபேல் விவகாரத்துக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என பாரிக்கர் என்னிடம் கூறினார்” எனப் பேசியிருந்தார். இவரின் பேச்சு சர்ச்சையாக மாற, பாரிக்கர் நேற்று ராகுலின் கருத்துக்குப் பதிலளித்திருந்தார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “நீங்க எதேச்சையாகத்தான் என்னை வந்து சந்தித்தீர்கள். கொள்கை ரீதியிலாக நமக்குள் பல்வேறு வேறுபாடுகள் இருந்தபோதும், நீங்கள் என்னை தனிப்பட்ட முறையில் சந்தித்தது நாகரிக அரசியலாகவே எடுத்துக்கொண்டேன். நமக்கு இடையே நடந்த 5 நிமிட சந்திப்பில், ரஃபேல் குறித்து எதுவும் கேட்கவும் இல்லை. அதுகுறித்து எதுவும் விவாதிக்கவில்லை. வாழ்த்து தெரிவிக்கவே என்னை சந்திக்க வந்ததாக நினைத்தேன். இந்தச் சந்திப்பு உள்நோக்கமானது என்பதைப் பின்புதான் அறிந்துகொண்டேன்” என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தற்போது, மனோகர் பாரிக்கரின் கடிதத்துக்கு விளக்கமளித்து ராகுல் காந்தி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், “ நீங்கள் எழுதியுள்ள கடிதம் மிகவும் வருத்தமாக உள்ளது. உங்களின் கடிதத்தால் தேவையில்லாத சர்ச்சை உருவாகியுள்ளது. உங்களின் நிலை எனக்கு நன்றாகப் புரிகிறது. பிரதமரிடம் இருந்து உங்களுக்கு அதிக அழுத்தம் வருகிறது என எனக்கும் தெரியும். உங்கள் விசுவாசத்தை நிரூபிக்க, என்னை முறையற்ற வகையில் விமர்சித்துள்ளீர்கள். உங்களைச் சந்தித்த பின் இரண்டு கூட்டங்களில் நான் பேசினேன். அவை அனைத்தும் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் உள்ளன. உங்களின் கடிதம் சர்ச்சையானதால், என் நிலையைப் பகிரவே இந்தக் கடிதத்தை எழுதியுள்ளேன். நீங்கள் விரைவில் நலம் பெற மீண்டும் ஒரு முறை வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
I totally empathise with Parrikar Ji's situation & wish him well. He's under immense pressure from the PM after our meeting in Goa and needs to demonstrate his loyalty by attacking me.
— Rahul Gandhi (@RahulGandhi) January 30, 2019
Attached is the letter I've written him. pic.twitter.com/BQ6V6Zid8m