க்ளின்டனையே பேர் சொல்லித்தான் அழைத்தேன்! ஆனால்... - மோடியை விமர்சித்த சந்திரபாபு நாயுடு | andhra CM Chandrababu Naidu said he addressed modi as sir to satisfy his ego for the state

வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (31/01/2019)

கடைசி தொடர்பு:12:50 (31/01/2019)

க்ளின்டனையே பேர் சொல்லித்தான் அழைத்தேன்! ஆனால்... - மோடியை விமர்சித்த சந்திரபாபு நாயுடு

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கடந்த ஒரு வருடமாக மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துவருகிறார். ஆனால், இவரின் கோரிக்கையை மத்திய அரசு சற்றும் கண்டுகொள்ளாமல் இருந்துவருகிறது.  இதனால், தேசிய ஜனநாயக் கூட்டணியிலிருந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி விலகியது. 

அதன் பின்னர் நடைபெற்ற அனைத்து நாடாளுமன்றக் கூட்டத்திலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி, தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி -க்கள் அமளியில் ஈடுபட்டனர். சிறப்பு அந்தஸ்து தொடர்பாக இதுவரை மத்திய அரசு வாய் திறக்கவில்லை. இதனால், பா.ஜ.க-வுக்கும் தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே கடுமையான மோதல் நிலவிவருகிறது.

சந்திரபாபு நாயுடு, தான் பங்கேற்கும் அனைத்து கூட்டங்களிலும் மோடியைக் கடுமையாக விமர்சித்துப் பேசிவருகிறார். இந்நிலையில், நேற்று ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரதமரை மோசமாகச் சாடினார்.

சந்திரபாபு நாயுடு

அவர் பேசும்போது, “முன்னதாக நான் அமெரிக்க அதிபர் பில் க்ளின்டனை சந்தித்தபோது, ’திரு.க்ளின்டன்’ என்று கூறிதான் உரை நிகழ்த்தினேன். ஆனால், பிரதமர் மோடி பற்றி நான் பேசினால், குறைந்தது பத்து முறையாவது  ‘மோடி சார்’ எனக் குறிப்பிடுவேன். அரசியலில் என்னைவிட இளையவர் மோடி. இருந்தும், மாநிலத்தின் நலனுக்காக அவரை சார் என்று அழைத்து, அவரின் ஈகோவை திருப்திசெய்து, ஆந்திராவுக்கு நல்லது செய்வார் என நம்பினேன். ஆனால், இதுவரை மாநிலத்துக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை. 

மேலும், மாநில நலனுக்காகத்தான் தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவளித்தது. அதிலும் எந்தப் பயனும் இல்லை. கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில், ஆந்திராவில் தன்னிச்சையாகப் போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சி, 10 இடங்களைக் கைப்பற்றியது. பா.ஜ.க ஆட்சியால் ஆந்திராவுக்கு இதுவரை எந்த நல்ல விஷயமும் நடக்கவில்லை” என்று பேசினார். 

இதற்கிடையில், இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டம் இன்று நாடாளுமன்றத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. நாளை மத்திய அரசு சார்பில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்செய்யப்பட உள்ளது. இன்று தொடங்கிய கூட்டத்திலும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என தெலுங்கு தேசம் எம்.பி-க்கள் நாடாளுமன்ற வாயிலில் போராட்டம் நடத்திவருகின்றனர்.