`ஓட்டு போடலைல... பணத்தை திருப்பிக் கொடுங்க' - வாக்காளர்களை அதிரவைத்த தெலங்கானா பிரமுகர்! | telangana man demanding the voters to return the money

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (31/01/2019)

கடைசி தொடர்பு:14:30 (31/01/2019)

`ஓட்டு போடலைல... பணத்தை திருப்பிக் கொடுங்க' - வாக்காளர்களை அதிரவைத்த தெலங்கானா பிரமுகர்!

மனைவி தேர்தலில் தோற்றதால், மக்களிடம் கொடுத்த பணத்தை கணவர் திரும்பக் கேட்ட வீடியோ வைரலாகிவருகிறது. 

தெலங்கானா பிரபாகர்

தெலங்கானா மாநிலம் சூரியபேட் மாவட்டம், ஜெய்ரெட்டிகுடம் கிராமத்தைச் சேர்ந்தவர், பிரபாகர். 55 வயதான இவர், காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஜெய்ரெட்டிகுடம்,  வார்டு பதவிக்கு அவரது மனைவி ஹேமாவதியை சுயேச்சையாகக் களமிறக்கினார். தேர்தலுக்கு முன்பாக ஹேமாவதியை வெற்றிபெறவைக்க வேண்டும் என விரும்பியுள்ளார் பிரபாகர். 

இதற்காக, தேர்தலுக்கு முன்பு ஹேமாவதி போட்டியிடும் வார்டில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும், ஒரு மதுபாட்டிலும், தனது மனைவி போட்டியிடும் சின்னமான ஜக் ஒன்றையும், கூடுதலாக ரூ.800 முதல் ஆயிரம் வரை வாக்காளர்களுக்குக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல, தேர்தல் முடியும் வரை அந்த வார்டு பகுதி மக்களை நன்றாகக் கவனித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அவரது மனைவி ஹேமாவதி படுதோல்வி அடைந்தார். அந்த வார்டில் இருந்து அவருக்கு 24 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. மொத்தம் 264 வாக்குகள் இருந்த நிலையில், ஹேமாவதிக்கு 24 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். 

பிரபாகர்

இதனால் ஆத்திரமடைந்த பிரபாகர், தனது மனைவி போட்டியிட்ட வார்டின் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, தன் மனைவிக்கு ஏன் ஓட்டுப்போடவில்லை எனக் கேள்வி கேட்டதுடன், ஓட்டுபோட்டோம் என்று கூறினால், தான் வைத்திருந்த அரிசிமீது சத்தியம் செய்யச் சொல்லி கேட்டுள்ளார். மேலும், ஓட்டுப்போடவில்லை என்றால், பணத்தை திருப்பிக் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். இதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.  அது, தற்போது வைரலாகிவருகிறது. கிராம மக்கள் பலர் அவரிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், பிரபாகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தற்போது புகார் கிளம்பியுள்ளது.

 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க