`யெஸ், ஆண் குழந்தை பிறந்துள்ளது' - ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்ட அம்ருதா வீட்டுக்கு புது வரவு! #AmruthaPranay | Amrutha delivered boy baby who lost her husband in the honour killing

வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (31/01/2019)

கடைசி தொடர்பு:14:27 (31/01/2019)

`யெஸ், ஆண் குழந்தை பிறந்துள்ளது' - ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்ட அம்ருதா வீட்டுக்கு புது வரவு! #AmruthaPranay

ஆணவக் கொலைக்கு தன் காதல் கணவர் பிரனயைப் பறிகொடுத்த தெலங்கானாவைச் சேர்ந்த அம்ருதாவுக்கு, நேற்று (ஜனவரி 30-ம் தேதி) ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. 

அம்ருதா

தெலங்கானாவில் மிர்யலாகுடா என்னும் பகுதியைச் சேர்ந்த பிரனய் குமாரும், அதே பகுதியைச் சேர்ந்த அம்ருதாவும் ஒருவரையொருவர் காதலித்துவந்தனர். அம்ருதா தொழிலதிபர் வீட்டுப் பெண். பிரனய் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். இதனால், அம்ருதாவின் தந்தை மாருதிராவ், இந்தக் காதலை கடுமையாக எதிர்த்ததோடு, மகளுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்யவும் முயன்றிருக்கிறார். வேறு வழியில்லாத காதல் ஜோடி, சென்ற வருடம் ஜனவரி மாதம் ஹைதராபாத்தில் இருக்கிற ஆரிய சமாஜில் திருமணம் செய்துகொண்டனர். அம்ருதா கருவுற்றார். கணவர் மற்றும் அவர் அம்மாவுடன் அம்ருதா மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காகச் சென்றபோது, மர்ம நபர் ஒருவர் பிரனயை வெட்டிக் கொன்றார்.  இது நடந்தது செப்டம்பரில். இந்தக் கொலையின் சிசிடிவி பதிவு, நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியது. கண்ணீருடனும் வயிற்றில் பிள்ளையுடனும் தன் கணவரின் சாவுக்கு நியாயம் வேண்டி 'ஜஸ்டிஸ் ஃபார் பிரனய்'  என்ற முகநூல் பக்கத்தை ஆரம்பித்தார் அம்ருதா. 

பிரனய்

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் கடந்த ஒரு வாரமாகவே 'பிரனய் மறுபடியும் வந்துவிட்டார்' என்ற வாசகங்களுடன் அம்ருதாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்ற செய்தி பரவிக்கொண்டிருந்தது. செய்தியின் நம்பகத்தன்மையை அறிந்துகொள்ள அம்ருதாவின் மூன்று மொபைல் எண்களிலும்  தொடர்புகொண்டோம். எதிலும் இன்கம்மிங் வசதி இல்லை. விசாரிக்கையில், நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாலும், தொடர்ந்து வந்துகொண்டிருக்கிற போன் கால்களை அம்ருதாவால் அட்டென்ட் செய்ய முடியவில்லை என்பதாலும் மொபைல் எண்ணை மாற்றியிருக்கலாம் என்று அம்ருதாவின் நட்பு வட்டத்தினர் தெரிவித்தார்கள். உடனே பிரனயின் கொலை வழக்கை விசாரித்துவருகிற போலீஸ் ஆஃபீஸரிடம் இதுகுறித்து கேட்டோம். ''சில நாள்களுக்கு முன்னால் அம்ருதாவுக்கு குழந்தை பிறந்ததாக வந்த செய்தி உண்மையில்லை. ஆனால், அம்ருதா நலமாக இருக்கிறார்'' என்ற தகவலைத் தெரிவித்தார். நேற்றைய தினம், மறுபடியும் இதே செய்தி முகநூலில் வலம் வர ''யெஸ், ஆண் குழந்தை பிறந்தது உண்மைதான்'' என்று செய்தியை உறுதிசெய்தார். 

ஆணவக் கொலைக்கு அப்பாவைப் பறிகொடுத்த அம்ருதாவின் குழந்தை, சாதி வெறிக்கு எதிராகப் போராடிய ரோஹித் வெமுலாவின் பிறந்த தினத்தில் பிறந்திருப்பதுதான் இதில் அழகான ஒற்றுமை.