அதிகரித்த வேலை இல்லா திண்டாட்ட விகிதம்... கவலை அளிக்கும் ஆய்வு முடிவுகள்! | India's unemployment rate hits four-decade high of 6.1% in 2017-18, says NSSO survey

வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (31/01/2019)

கடைசி தொடர்பு:15:10 (31/01/2019)

அதிகரித்த வேலை இல்லா திண்டாட்ட விகிதம்... கவலை அளிக்கும் ஆய்வு முடிவுகள்!

ந்தியாவில், 2017-18-ம் ஆண்டில், கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்துள்ளதாகத்  தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

வேலை வாய்ப்பின்மை

வேலை வாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்பின்மைகுறித்த விவரங்களை மத்திய அரசு வெளியிடாமல் இருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேசிய புள்ளியியல் ஆணையத்தின் செயல் தலைவரான பி.சி.மோகனன் மற்றும் உறுப்பினரான ஜே.பி. மீனாட்சி ஆகியோர், புதன்கிழமையன்று தங்களது பதவியை ராஜினாமா செய்தநிலையில், இதுகுறித்த விவரங்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை என்ற போதிலும், தற்போது கசிந்துள்ளது. 

2014 -ம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார். ஆனால், அவரது ஐந்தாண்டுக்கால ஆட்சி முடிவடைய இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்ததைவிட ஒவ்வோர் ஆண்டும் வேலை வாய்ப்புகள் குறைந்துவந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

2016-ம் ஆண்டு நவம்பர் மாதம், பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர், நாட்டின் வேலை வாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்பின்மைகுறித்து, என்எஸ்எஸ்ஓ ( National sample survey office- NSSO)எனப்படும் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் சார்பில் முதன் முறையாக விரிவான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அமல் போன்ற காரணங்களாலும், அரசின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட சில காரணிகளாலும் (factors), கடந்த சில ஆண்டுகளாக வேலைவாய்ப்பின்மை படிப்படியாக அதிகரித்துள்ளதாகத்  தெரியவந்துள்ளது. 

2017-18-ம் ஆண்டில், வேலை வாய்ப்பின்மை விகிதம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் 6.1 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதற்கு முன்னர், 1972-73-ம் ஆண்டில்தான் இந்த அளவுக்கு வேலை வாய்ப்பின்மை விகிதம் அதிகரித்துக் காணப்பட்டது. 

 வேலை வாய்ப்பின்மை, கிராமங்களைவிட நகரங்களில்தான் அதிகமாகக் காணப்படுவதாகவும், இவை முறையே 5.3% மற்றும் 7.8% என்ற அளவில் காணப்படுவதாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 2017-18-ம் ஆண்டில்தான், அதற்கு முந்தைய ஆண்டைவிட இளைஞர்களிடையே வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்துக் காணப்பட்டதாகவும், ஒட்டுமொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது, இந்த விகிதம் அதிகரித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோன்று, வேலை செய்வோர் அல்லது வேலை தேடுவோர் பிரிவில் வரும் தொழிலாளர் சக்தியின் பங்களிப்பு (Labour force participating rate - LPFR) விகிதமும் 2011-12-ம் ஆண்டில் காணப்பட்ட 39.5 சதவிகிதத்திலிருந்து 2017-18-ம் ஆண்டில் 36.9 சதவிகிதமாகக் குறைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. 

முன்னதாக, வேலை வாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்பின்மை குறித்த விவரங்களைத் தேசிய புள்ளியியல் ஆணையம் ஆண்டுதோறும் வெளியிட்டுவந்த நிலையில், 2017 - 18-ம் ஆண்டுக்கான விவரங்களை வெளியிட அந்த ஆணையம் அனுமதி அளித்தபோதிலும்,  அந்த விவரம் வெளியானால், அது ஆட்சியாளர்களுக்கு எதிராக அவப்பெயரை ஏற்படுத்தும் என்று கருதியே, மத்திய அரசு அந்த விவரங்களை வெளியிடாமல் இருந்ததாகத் தெரிகிறது. 

தொழிலாளர்கள்

இதையடுத்தே, அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புதெரிவித்து தேசிய புள்ளியியல் ஆணையத்தின் செயல் தலைவரான பி.சி. மோகனன் மற்றும் உறுப்பினரான ஜே.பி. மீனாட்சி ஆகியோர், புதன்கிழமையன்று தங்களது பதவியை ராஜினாமாசெய்தனர். 

இது தொடர்பாக பி.சி. மோகனன், ஆங்கில செய்திச் சேனல் ஒன்றுக்கு அளித்திருந்த பேட்டியில், மத்திய அரசு தங்களை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்றும், கடந்த சில  மாதங்களாகவே தாங்கள் ஒதுக்கிவைக்கப்பட்டிருந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க