காந்தி உயிரைக் காப்பாற்றிய ரகசியம்... மறக்கப்பட்ட பதக் மியான்! | The Forgotten hero Batak Mian, Who Refused To Poison Mahatma Gandhi

வெளியிடப்பட்ட நேரம்: 16:32 (31/01/2019)

கடைசி தொடர்பு:16:32 (31/01/2019)

காந்தி உயிரைக் காப்பாற்றிய ரகசியம்... மறக்கப்பட்ட பதக் மியான்!

காந்தியின் உயிரைக் காப்பாற்றிய பதக் மியான் குடும்பத்துக்கு நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் அளித்த உறுதி மொழி நிறைவேற்றப்பட்டதா?

காந்தி உயிரைக் காப்பாற்றிய ரகசியம்... மறக்கப்பட்ட பதக் மியான்!

ரலாற்றில், பல விஷயங்கள் மாற்றி எழுதப்பட்டுள்ளன; பல உண்மைகள் திரிக்கப்பட்டுள்ளன; நாட்டுக்காகப் பலர் செய்த தியாகங்கள் பதியப்படாமலும் போயிருக்கின்றன. மகாத்மா காந்தியைக் காப்பாற்றிய பதக் மியானும் வரலாற்றில் பதிக்கப்படாமல்போன ஒரு மனிதர்தான். பதக் மியான் இடத்தில் வேறு ஒருவர் இருந்திருந்தால், கடந்த 1917-ம் ஆண்டிலேயே மகாத்மா காந்தி இறந்திருக்கக்கூடும். காந்தி உயிருக்குக் குறிவைத்த பின்னணியில், குரூர மனம் படைத்த பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர் இருந்தார். காந்தியின் உயிரை பதக் மியான் காப்பாற்றிய சம்பவத்தை நேரில் கண்ட ஒரே நபர், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத். 

1917-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி பீகாரின் சம்பரான் மாவட்டத் தலைநகர் மோதிகாரி ரயில்நிலையத்தில் ஏராளமாக விவசாயிகள் கூடியிருக்கின்றனர். `காந்தி வந்தால்தான் நம்மைக் காப்பாற்ற முடியும்' என்ற நம்பிக்கை அவர்களின் கண்களில் தெரிகிறது. சத்தியாகிரகப் போராட்டத்தைக் காந்தியடிகள் கையில் எடுத்த சமயம் அது. இண்டிகோ என்ற பிரிட்டிஷ் நிறுவனம், நிலச்சுவான்தார்களை கையில் போட்டுக்கொண்டு விவசாயிகளைக் கொடுமைப்படுத்திக்கொண்டிருந்தது. விவசாயிகளுக்காகப் போராட்டம் நடத்த, காந்தியடிகள் மோதிகாரிக்கு வர இருந்தார். அவரை வரவேற்கவே விவசாயிகள் அங்கே திரண்டிருந்தனர்.  முஷார்பூரிலிருந்து வந்த ரயிலில் காந்தியடிகள் மோதிகாரி வந்தடைந்தார். அதே நாள் இரவில் இண்டிகோ நிறுவனத்தைச் சேர்ந்த இர்வின் என்கிற ஆங்கிலேயே அதிகாரி, காந்தியை இரவு விருந்துக்கு அழைத்திருந்தார்.

காந்தி

இங்கேதான் பதக் மியான் வருகிறார். இர்வினிடத்தில் சமையல்காரராக வேலைசெய்தவர்தான் பதக் மியான். விருந்துக்கு வரும் காந்திக்கு, பாலில் விஷம் கலந்து கொடுத்துவிடுமாறு இர்வின் உத்தரவிடுகிறார். `சொன்னதைச் செய்தால் லட்சக்கணக்கில் பணம்... செய்ய மறுத்தால் உன்னைக் கொலைசெய்துவிடுவேன்' எனவும் பதத் மியானை எச்சரிக்கிறார். பதக் மியானோ நாட்டுப்பற்றுமிக்கவர். `தேசத்தின் நம்பிக்கையாகக் கருதப்படும் தலைவருக்கு விஷம் கலந்த பாலை அளிப்பதா!' என்று மனம் பதறியது. எஜமானரின் உத்தரவை மீறினால் உயிர்பிழைக்க முடியாது என்பதால் செய்வதறியாது திகைத்தார்.

எனினும், இர்வின் உத்தரவிட்டதுபோல விஷம் கலந்த பாலை காந்தியிடம் கொடுத்தார். ஆனால், பால் டம்ளரைக் கொடுக்கும்போது, காந்தியடிகளின் காதில் பாலில் விஷம் கலக்கப்பட்டது குறித்து மெள்ள சொல்லிவிடுகிறார். அப்போது, உடன் இருந்தவர்தான் டாக்டர் ராஜேந்திர பிரசாத். பதக் மியான் செயலால் காந்தி உயிர்பிழைத்துக்கொண்டார். காந்தியடிகளிடத்தில் உண்மையைக் கூறியதால், பதக் மியான் சிறைக்குள் தள்ளப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார். மோதிகாரியில் இருந்த அவரின் வீடு உடைக்கப்பட்டது. குடும்பத்தினர் ஊரைவிட்டு விரட்டப்பட்டனர். காந்தியை பதக் மியான் காப்பாற்றிய விஷயம், 1950-ம் ஆண்டு வரை வெளியே தெரியாது. 

இதே ஆண்டில் சம்பரான் மாவட்டத்துக்கு வருகிறார் நாட்டின் முதல் குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத். மோதிகாரி ரயில்நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. வயதான ஓர் உருவம் தன்னை நோக்கி முன்னேறத் துடிப்பதைப் பார்த்த ராஜேந்திர பிரசாத்துக்கு, பொறி தட்டியது. `ஆஹா... இது அவரல்லவா?' என்று அடையாளம் கண்டுகொண்டார்.

பதக் மியான்

காந்தியைக் காப்பாற்றிய முகத்தை எப்படி மறக்க முடியும்? உடனடியாக அவரை நோக்கிச் சென்ற ராஜேந்திர பிரசாத், பதக் மியானின் கரங்களைப் பிடித்துக்கொண்டார். குடியரசுத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மேடையில் குடியரசுத் தலைவருக்கு அருகில் பதக் மியானுக்கும் இருக்கை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில்தான் பதக் மியான், காந்தியைக் காப்பாற்றிய விஷயத்தை மக்களிடையே போட்டு உடைத்தார் ராஜேந்திர பிரசாத். `இவர் இடத்தில் வேறு யாராவது இருந்தால் காந்தியடிகளை அப்போதே நாம் இழந்திருப்போம். தேசத்தின் வரலாறு மாறியிருக்கும்' என்று ராஜேந்திர பிரசாத் குறிப்பிட்டார். 

இதே மேடையில் சம்பரான் மாவட்ட ஆட்சியரிடம், காந்தியைக் காப்பாற்றிய பதக் மியானுக்கு 24 ஏக்கர் நிலம் வழங்குமாறு குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். ராஜேந்திர பிரசாத்தின் உறுதிமொழி காற்றில் பறக்கவிடப்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டு, `காந்தியின் உயிரைக் காப்பாற்றிய பதக் மியான் குடும்பத்துக்கு, ராஜேந்திர பிரசாத் அளித்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை' என `இந்துஸ்தான் டைம்ஸ்' செய்தி வெளியிட்டது. அப்போது, குடியரசுத் தலைவராக இருந்த பிரதீபா பாட்டீல் இந்த விஷயத்தில் தலையிட்டார். பிறகு, பதக் மியான் குடும்பத்தினருக்கு 12 ஏக்கர் நிலம் அளிக்கப்பட்ட தகவல் தெரியவந்தது. 

1957-ம் ஆண்டு பதக் மியான் இறந்தார். கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள சிஷ்லா அஜ்வரி என்ற கிராமத்தில் அவருக்குக் கல்லறை உள்ளது. அவரது பேரக்குழந்தைகள் தினக்கூலிகளாக வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்