`என் மகளைவிட அதிக மார்க் எடுக்கணும்!’ - பிள்ளைகளுடன் ஒரே வகுப்பில் படிக்கும் பெற்றோர்கள் | Students and parents share the same bench at a school

வெளியிடப்பட்ட நேரம்: 18:25 (31/01/2019)

கடைசி தொடர்பு:18:25 (31/01/2019)

`என் மகளைவிட அதிக மார்க் எடுக்கணும்!’ - பிள்ளைகளுடன் ஒரே வகுப்பில் படிக்கும் பெற்றோர்கள்

ஹரியானா மாநிலம் யமுனா நகர் மாவட்டத்தில் உள்ள ஃபெஜ்பூர் கிராமம். இந்தக் கிராமத்தில் ஒரே ஒரு அரசு நடுநிலைப்பள்ளி மட்டுமே உள்ளது. இங்கு படிக்கும் குழந்தைகள் 8-ம் வகுப்பு முடித்தவுடன் மேல் படிப்புக்காக கிஸாராபாத் என்ற நகரத்துக்குச் செல்ல வேண்டும். இதன் காரணமாகவே அங்குள்ள பெண் குழந்தைகள் 8-ம் வகுப்பைத் தாண்டி படிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். 

PC :HindustanTimes

இந்த நடைமுறையை மாற்றியமைக்க அதே கிராமத்தில் உள்ள ஜபார் பொஸ்வால் என்பவர் பள்ளியை பாதியில் நிறுத்தியவர்களை மீண்டும் படிக்கவைக்க அங்குள்ள ஒரு கட்டடத்தில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளை கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கினார். இந்த வகுப்புகள் தொடங்கப்பட்ட பின்னர், முதன்முதலாக அங்கு 24 மாணவர்கள் இணைந்துள்ளனர். அந்த வருடம் நடந்த தேர்வில் அவர்கள் அனைவரும் தேர்ச்சிபெற்று அசத்தினர். அப்போதிலிருந்து மூன்று வருடங்களாக அந்த வகுப்புகள் நடைபெற்று வருகின்றனர்.

தங்கள் பிள்ளைகளின் வளர்ச்சியைக் கண்ட பெற்றோர்களும் தங்களையும் வகுப்பில் இணைத்துக்கொள்ளும்படி கேட்டுள்ளனர். தற்போது பெற்றோர்களும் அவர்களின் பிள்ளைகளும் ஒரே வகுப்பில் அமர்ந்து படித்து வருகின்றனர். 

இது பற்றி பேசிய சம்ஸாத் என்ற பெண், “எனக்கு 40 வயதாகிறது. என் மகளுக்கு 16 வயதாகிறது. அவள் 8-ம் வகுப்பு முடித்த பிறகு, மேல் படிப்புக்கு நகரத்துக்குச் செல்ல வேண்டும். எங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு கருதி நாங்கள் அவர்களை நகரத்துக்கு அனுப்புவதில்லை. தற்போது 9, 10-ம் வகுப்புகளில் சேர்ந்து எங்கள் கிராமத்தில் உள்ள நிறைய பெண்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களைப் பார்க்கும்போது எனக்கும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதனால் நானும் என் மகளும் ஒரே வகுப்பில் இணைந்துள்ளோம்.  

சுமார் 25 வருடங்களுக்குப் பிறகு, நான் மீண்டும் பள்ளிக்குச் செல்கிறேன். என் முடிவு எனக்கே மகிழ்ச்சியாகவுள்ளது. எங்கள் வீட்டின் பொருளாதார நிலை காரணமாக என் படிப்பை பாதியில் விட்டுவிட்டேன். தற்போது என் மகளுடன் போட்டிபோட்டு படிக்கிறேன். ஏப்ரல் மாதம் வரும் 10-ம் வகுப்புத் தேர்வில் என் மகளைவிட அதிக மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்று படித்து வருகிறேன்” என்று கூறுகிறார். 

அந்தப் பள்ளியில் இரு ஆசிரியைகள் மட்டுமே உள்ளனர். அலிமா என்ற ஆசிரியர் பேசும்போது, “இந்தக் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் கற்பிக்க வேண்டும் என்பதுதான் என் கனவு. முதலில் என்னைவிட அதிக வயதுடையவர்களுக்குக் கற்பிக்க மிகவும் தயக்கமாக இருந்தது. ஆனால், தற்போது அது பழகி அவர்களுக்குக் கற்பிக்க ஆர்வமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

News Cdredits : HindustanTimes