ஆஸ்திரேலியக் குடியுரிமைக்காக போலி ஆவணங்கள் மூலம் தங்கையை மணந்த சகோதரன்! | brother, sister marrying each other for Australian visa

வெளியிடப்பட்ட நேரம்: 20:53 (31/01/2019)

கடைசி தொடர்பு:20:53 (31/01/2019)

ஆஸ்திரேலியக் குடியுரிமைக்காக போலி ஆவணங்கள் மூலம் தங்கையை மணந்த சகோதரன்!

ஆஸ்திரேலியாவில் குடியுரிமை கிடைக்க வேண்டுமென்றால் குறைந்தது ஆறு வருடங்களாவது அங்கு வாழ வேண்டும். அப்படி அந்த நாட்டில் குடியுரிமை பெற்றுவிட்டால் வேலை பெறுவது முதல் பல சலுகைகளை எளிதில் பெறலாம். 

திருமணம்

பஞ்சாபை சேர்ந்த ஒருவர் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து அந்த நாட்டிலேயே குடியுரிமை பெற்று அனைத்து சலுகைகளுடனும் வாழ்ந்து வருகிறார். அதே சலுகைகள் தன் தங்கைக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அவரையும் ஆஸ்திரேலியா அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளார். குடியுரிமை உள்ள கணவருடன் வரும் மனைவிக்கும் எளிதில் குடியுரிமை கிடைத்துவிடும்.

இதனால் பஞ்சாபில் உள்ள ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் போலி ஆவணங்களுடன் அண்ணன், தங்கை இருவரும் திருமணம் செய்து  ஆவணங்கள் தயாரித்து அதை வைத்து பாஸ்போர்ட் மற்றும் விசா பெற்று கணவன் மனைவியாக ஆஸ்திரேலியாவுக்கும் சென்றுள்ளனர். பிறகு, அங்கு குடியுரிமை நிலையத்தில் நடந்த சோதனையில் இவர்களின் ஆவணங்கள் போலி எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடந்த விசாரணையில் தங்களின் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ளவே இருவரும் ஆஸ்திரேலியா வந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக குடியுரிமை அதிகாரி கூறியுள்ளதாவது, “வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக இவர்கள் இருவரும் சமூக கட்டமைப்பைச் சிதைத்துள்ளனர். இந்தக் குற்றத்துக்கு சட்டத்தில் எந்த விதிமுறைகளும் இல்லாத காரணத்தால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல போலியான ஆவணங்களுடன் பலர் வெளிநாடுகளுக்கு வந்துள்ளனர், ஆனால், இப்படி ஒரு மோசடி நடந்தது இதுதான் முதல்முறை” எனக் கூறியுள்ளார்.

கடந்த சில வருடங்களில் மட்டும் ஆஸ்திரேலியாவுக்கு என்று சுமார் 15,000 பேரின் விசாக்கள் போலி எனக் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.